இமாச்சல பிரதேசத்தில் ஆடு, புலி ஆட்டம்.. இறுதியாக வென்று அசத்திய காங்கிரஸ்.. ஆட்சியை பறிகொடுத்த பாஜக
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ், பாஜக இடையே ஆடு, புலி ஆட்டம் நடந்தது. இறுதியாக காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசத்தில் வென்று அசத்தி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது.
இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஓட்டு எண்ணிக்கை
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் இன்று 59 இடங்களில் உள்ள 68 ஓட்டுச்சாவடி மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. தபால் ஓட்டுக்களை பொறுத்தமட்டில் பல தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது.

காங்கிரஸ்-பாஜக ஆடு, புலி ஆட்டம்
அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருகட்சிகளின் வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இதனால் இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமையலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து ஆடு, புலி ஆட்டம் போன்று ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் மாறிமாறி முன்னிலை வகித்து வந்தனர். மேலும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இதனால் இறுதியில் எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற சூழல் நிலவியது. இதனால் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் களநிலவரம் அதிக கவனத்தை ஈர்த்தது.

காங்கிரஸ் கட்சி வெற்றி
இறுதியாக இந்த தேர்தலில் கருத்து கணிப்புகளை புறம்தள்ளி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேச மாநிலத்தில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். இதன்மூலம் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜொலிக்காத ஆம்ஆத்மி
முன்னதாக இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியும் 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும் ஆம்ஆத்மி கட்சியை இமாச்சல பிரதேச மக்கள் விரும்பவில்லை. இதனால் அந்த கட்சி தேர்தலில் ஜொலிக்கவில்லை. ஒரு இடத்தில் கூட ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெறாமல் பரிதாபமான நிலைக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications