"முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்பக்கூடாது.." பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி கண்ணீர் பேட்டி
டெல்லி: பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால். இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கும் தனது கணவர் மரணத்திற்கும் நியாயம் வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட மதத்தினர் அல்லது சமூகத்தினர் மீது வெறுப்பை விதைப்பதை ஒருபோதும் விரும்பவில்லை என்று அவரது மனைவி ஹிமான்ஷி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் நாட்டையே உலுக்கிப் போடுவதாக இருந்தது. அங்கு இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குறிப்பாக இந்தத் தாக்குதலில் புதிதாகத் திருமணமான கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவரும் கொல்லப்பட்டார்.

ஹிமான்ஷி நர்வால்
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இன்று குருகிராமில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "அவர் எங்கிருந்தாலும், அவர் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழுத் தேசமும் அவருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
எந்தவொரு சமூகத்தின் மீதும் கோபத்தைத் திருப்பக்கூடாது.. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்பவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும்.. அமைதி மட்டுமே வேண்டும். அதேபோல எனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்" என்றார்.
வெறுப்பைப் பரப்பக்கூடாது
உயிரிழந்த வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற போதே ஹிமான்ஷி நர்வால் தனது கணவரின் நினைவில் கதறி அழுதார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது தான் ஹிமான்ஷி நர்வால் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். தனது கணவர் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்பக்கூடாது என்று அவர் கூறினார்.
கடற்படை வீரரான வினய் நர்வாலுக்கும் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வாலுக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தான் திருமணம் நடந்திருந்தது. தேனிலவுக்காகவே அவர்கள் காஷ்மீர் சென்றிருந்தனர். அவர்கள் ஏப்ரல் 22ம் தேதி பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த போது, ஹிமான்ஷி கண் எதிரிலேயே அவரது கணவர் வினய்யை சுட்டு கொன்றனர்.
நெஞ்சை உலுக்கிய வீடியோ
இதைப் பார்த்து ஹிமான்ஷி அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார். அங்கு அவருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. நொடிகளில் தனது கணவரை இழந்திருந்தார். அப்போது அவர் அதிர்ச்சியுடன் என்ன நடந்தது கூறியது இணையத்தில் தீயாகப் பரவி அனைவரையும் உலுக்கிப் போட்டது. இருவரும் பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தீவிரவாதிகள் வந்து சுட்டுக் கொன்றதாகக் கூறியிருந்தார். அந்த வீடியோ தான் இணையத்தில் பலரையும் உலுக்கிப் போட்டது.
இந்தியா நடவடிக்கை
அதைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதலுக்குக் காரணமான அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்தத் தாக்குதலை 3- 5 தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவர்கள் இன்னும் காஷ்மீரில் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. அதேபோல தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பாக். எதிராகவும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications