பிற மாநிலத்தவரின் வீடா வயநாடு? 11 வேட்பாளர்கள் கேரளாவே இல்லை: களத்தில் 2 காந்திகள்
கேரளா: வயநாட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களம் கண்டுள்ள மொத்தம் 16 பேரில் 11 பேர் பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தேர்தல் ஆணையம் அளித்துள்ள விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மிகப்பெரிய நிலச்சரிவுக்குப் பிறகு வயநாடு மக்களவைத் தொகுதி மீண்டும் எழு ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தொகுதியில் நடைபெற்ற 2024 மக்களைத் தேர்தலில் உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல்காந்தி வெற்றிபெற்றார். ஆனால், தேர்தல் சட்டவிதிகளின்படி ஒருவர் ஒரு தொகுதி பதவியை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால், அவர் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடும்போதே அவர் இந்தப் பதவியை வெற்றி பெற்றால் விட்டுக்கொடுத்துவிடுவார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதை ராகுல் பிரச்சார களத்தில் மறுத்திருந்தார். தனக்கு மாற்று வேட்பாளராக பிரியங்கா காந்தியை அவர் முன்மொழிந்து இருந்தார். ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ததினால் இந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரச்சாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. வரும் 7 ஆம் தேதி வரை பிரியங்கா இங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதற்காகப் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்றுப் பேசியும் வருகிறார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. அதில் இரண்டு தனித் தொகுதிகளாகவும் உள்ளன. வரும் 20 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதுவரை மொத்தம் 16 வேட்பாளர்களின் மனுக்களை அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் இந்த வேட்பாளர்களில் 11 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்களே இல்லை என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் மூலம் அறிய முடிகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த அதிகம் பேர் போட்டியிடும் ஒரு தொகுதியாக வயநாடு மாறியுள்ளது. அதற்குக் காரணம் ராகுல் காந்தி தான்.
தேர்தல் ஆணையம் இந்த 16 வேட்பாளர்களுக்கான சின்னங்களையும் ஒதுக்கியுள்ளது. மொத்தம் 16 பேரில் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். மேலும் புது டெல்லியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அடுத்ததாக குஜராத், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர்.
கடந்த 2019 ஆண்டு வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அப்போது மொத்தம் 3 வேட்பாளர்கள் மட்டுமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அப்போது மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியை தவிர்த்து மொத்தம் மூன்று காந்திகள் இங்கே தேர்தல் களத்தில் மோதிக் கொண்டனர். கே.எம். சிவர்பிரசாத் காந்தி, கே.இ. ராகுல்காந்தி, ராகுல் காந்தி கே என வாக்காளர்களைக் குழப்பமடையச் செய்வதற்காக ஒரே பெயரில் மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இப்போது நடைபெறும் இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து இவ்வளவு காந்திகள் களத்தில் இறங்கி மக்களைக் குழப்பவில்லை. ஆனால், கோபால் ஸ்வரூப் காந்தி என்று பெயரில் ஒரு காந்தி போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நூல் முகம்மது மற்றும் தேர்தல் மன்னன் கே. பத்மராஜன், சேதா கவுர் என மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த ருக்மினி, இஸ்மாயில் ஜபியுல்லா,ஷேக் ஜலீல் நிற்கின்றனர். குஜராத்தைச் சேர்ந்த ஜெயேந்திர கே ரத்தோட் என்பவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கோபால் ஸ்வரூப் காந்தி, சோனு சிங் யாதவ் இருவரும் களம் கண்டுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த துக்கிராலா நாகேஸ்வர ராவ் என இருவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் பத்மராஜனும் கோபால் காந்தியும் முன்பே ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்கள். இதில் பத்மராஜன் என்பவர் நரசிம்ம ராவ் தொடங்கி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தேர்தலில் நிற்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருபவர். இதுவரை 245 தேர்தல்களில் இவர் போட்டியிட்டு கடும் தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளார். இவரைப் போல சிலர் பிரபலமாக மாறுவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேறு சிலர் தங்களின் அரசியல் கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆகவே, வெற்றி பெறுவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை. தலித் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துவதற்காகச் சீதா தேர்தலில் நிற்கிறார். ஷேக் ஜலீல் முஸ்லிம்களுக்கு 12% இடஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இதை ஒரு பிரச்சார களமாக மாற்ற விரும்பி நிற்கிறார். கேரளாவைச் சேர்ந்த 5 வேட்பாளர்களில் எல்.டி.எஃப் வேட்பாளர் சத்யன் மொகேரி, ஸ்ரீ அச்சுதம் மற்றும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications