‛50 அடி நீளம்’.. பூமியின் ராட்சத பாம்பு இதுதான்! 4.70 கோடி ஆண்டுக்கு முன் மிரட்டிய குஜராத் ‛வாசுகி’
காந்தி நகர்: உலகிலேயே மிகவும் நீளமான அதேவேளையில் உடல் பருமனான பாம்புகளில் ஒன்றான ‛‛வாசுகி’’ இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாம்பு 4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பானந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு சில எலும்புகள் புதை படிமங்களாக கிடைத்தன. ஐஐடி ரூர்க்கியை சேர்ந்த புவி அறிவியல் துறை தலைவர் சுனில் பாஜ்பாய் மற்றும் முன்னாள் பேராசிரியர் டெபாஜித் தத்தா ஆகியோர் இதனை கைப்பற்றினர்.
அப்போது முன்காலத்தில் வாழ்ந்த ராட்சத முதலை இறந்து பூமிக்கடியில் புதைந்து இருக்கலாம் எனவும், அதன் எலும்புகள் தான் புதை படிமங்களாக இப்போது கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அந்த எலும்புகள் முதலைக்குரியது தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அந்த புதைப்படிம எலும்புகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. அந்த எலும்புகள் எந்த உயிரினத்துக்கானது என்பது பற்றிய ஆய்வு தொடங்கப்பட்டது.
கடந்த 2022ல் ஆய்வு தீவிரமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் தான் அந்த ஆய்வில் திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது. இந்த உண்மை என்பது அனைவரின் உடலையும் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது. அதாவது ஐஐடி ரூர்க்கி சார்பில் ‛‛Largest Known madsoiid snake from warm eocene period of Inida suggests Intercontinental Gondwana Dispersal’’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ‛ஜர்னல் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ எனும் தலைப்பில் ‛ஸ்பிரிங்கர் நேச்சர்’ இணையதளத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பூமியில் 50 அடிக்கு ராட்சத பாம்பு வாழ்ந்து இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை என்று தான் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அதாவது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் புதைப்படிமங்களாக கிடைத்த எலும்புகள் ராட்சத முதலைக்குரியது அல்ல. அது ராட்சத பாம்புக்குரியது. கட்ச் பகுதியில் கிடைத்த எலும்புகள் ராட்சத பாம்பு என்பது அனகோண்டா வகையை சேர்ந்தது. உருவத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும். நீளமாகவும், பருமனாகவும் இருக்கும் இந்த பாம்பு மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டது.
இது ஒரு இடத்தில் பதுங்கி பிற உயிரினங்களை வேட்டையாடி உணவாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டது. இந்த பாம்பின் பெயர், ‛வாசுகி' என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்து கடவுள்களில் ஒருவரான சிவபெருமானுக்கும் வாசுகி பாம்புவுக்கும் நெருங்கிய பந்தம் உள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. சிவபெருமான் பாற்கடலை கடைய மத்தாக பயன்படுத்தியது ‛வாசுகி' பாம்பை தான். அந்த வகை ‛வாசுகி' பாம்பை சேர்ந்தது தான் இது. இந்த பாம்பு பொதுவாக சூடான பிரதேசத்தில் தான் வசிக்கும். குஜராத்தின் கட்ச் என்பதும் வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது.
இதன்மூலம் புதைபடிமங்களாக கிடைத்த எலும்புகள் ராட்சத முதலைக்குரியது இல்லை. இது ராட்சத பாம்பான வாசுகி பாம்புக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. இது சுமார் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்.. 47 மில்லியன் என்பது 4 கோடியே 70 லட்சம் ஆண்டுக்கு முன்பு) முந்தை Eocene காலத்தை சேர்ந்தது. 28 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையுடன் சூடான பரப்பில் வளரும் வகையில் இருக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஐஐடி ரூர்க்கியின் புவி அறிவியல் துறை தலைவரான சுனில் பாஜ்பாய் கூறுகையில், ‛‛இந்த பாம்பு 11 மீட்டர் (36 அடி) முதல் 15 மீட்டர் (49.22 அடி) வரையிலான நீளத்தை கொண்டு இருக்கும். கொலம்பியாவில் இருந்ததாக கூறப்படும் டைட்டனோபோவாவை (Titanoboa) விட இந்த பாம்பு நீளமானது. இதனால் பூமியில் உள்ள ராட்சத பாம்புகளில் இது ஒன்றாக இருக்கலாம். மேலும் இது டைட்டனோபோவா மற்றும் மலைப்பாம்பை போல் உருவ அமைப்பை கொண்டது தான் இந்த பாம்பு. இந்த இனம் இந்தியாவில் அழிந்து விட்டது.
இந்தியா-ஆசியா மோதல் காரணமாக இந்தியாவில் இருந்து தெற்கு யூரேசியா வழியாக வடஆப்பிரிக்காவிற்கு இந்த பாம்புகள் சென்று இருக்கவும் வாய்ப்புள்ளது. நாங்கள் இந்த எலும்புகளை 2005ல் எடுத்தபோது பிற ஆய்வுகளில் கவனம் செலுத்தினோம். அப்போது ராட்சத முதலைக்கானது என நினைத்தோம். ஆனால் கடந்த 2022ல் தான் இந்த புதைப்படிவ எலும்பு பற்றி ஆய்வு செய்ய தொடங்கினோம். இப்போது அந்த எலும்பு முதலைக்கானது இல்லை. ராட்சத பாம்புக்கானது என தெரியவந்துள்ளது. ’’ என்றார்.
முன்னதாக சுனில் பாஜ்பாய் ஜெய்சல்மாரில் தாவரங்களை உண்ணும் டைனோசர் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைனோசர் 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் 50அடி நீளம் கொண்ட ராட்சத அனகோண்டா வகை ‛வாசுகி இண்டிகஸ்' பாம்பு இந்தியாவில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications