அமெரிக்காவின் 50% வரி.. எவ்வளவு அழுத்தம் வந்தாலும் அதை செய்ய மாட்டேன்! பிரதமர் மோடி திட்டவட்டம்
அகமதாபாத்: அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு பிரதமர் மோடி அழுத்தமாக பதிலடி (Modi hits back at US President Trump) கொடுத்துள்ளர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "எங்கிருந்து எவ்வளவு அழுத்தம் வருகிறது என்பது ஒரு விஷயமே இல்லை. நமது குடிமக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும். காந்தியின் மண்ணில் இருந்து நான் ஒரு உறுதியை மீண்டும் மீண்டும் அளிக்கிறேன்.. என்னை பொறுத்தவரை உங்களின் நலனே முக்கியமானது. என்று பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்க்கு 50 சதவீதம் வரியை விதித்துள்ளார். இந்தியாவை வரி ராஜா என்றும் நல்ல நட்பு நாடாக இருந்தாலும் வர்த்தகம் செய்வதில் இந்தியா கடுமையான கெடுபிடி காட்டுவதாக விமர்சித்து வந்த டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.

இந்தியாவுக்கு வரி விதித்த டிரம்ப்
அதேபோல, ரஷ்யாவிடம் மலிவு விலையில் எண்ணய் கொள்முதலை இந்தியா செய்யக்கூடாது என்று கூறி வந்த டிரம்ப், இந்தியா வர்த்தகம் செய்வதை தொடர்ந்தால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து, தான் கூறியபடியே இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
நம் குடிமக்களின் நலன்களுக்கே முன்னுரிமை
டிரம்பின் இந்த வரி விதிப்பு வரும் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்தான், அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு அழுத்தமாக பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
எங்கிருந்து எவ்வளவு அழுத்தம் வருகிறது என்பது ஒரு விஷயமே இல்லை. அதை தாங்கும் வலிமையை அதிகரித்துக்கொண்டே இருப்போம். உலக அளவில் பொருளாதார சுயநலமிக்க கொள்கைகளை இன்று நாம் பார்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா உறுதியாக நிற்கும். நமது குடிமக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும். காந்தியின் மண்ணில் இருந்து நான் ஒரு உறுதியை மீண்டும் மீண்டும் அளிக்கிறேன்..
விவசாயிகள் நலனில் சமரசம் கிடையாது
என்னை பொறுத்தவரை உங்களின் நலனே முக்கியமானது. சிறு குறு தொழில் செய்வோர், விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்பவர்கள் பாதிக்கப்படும் விஷயத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நமது விவசாயிகள், மீனவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், சுதேசி' (மேக் இன் இந்தியா) தயாரிப்புகளை நோக்கி மாற வேண்டும்.
விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுப்பதில் சுவர் போல இருப்பேன். விவசாயிகள் நலனில் சமரசம் செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார்.
அமெரிக்கா இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த வர்த்தக பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதாக இருந்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், அந்த நாட்டிற்கு பொருளாதார ரீதியில் வலு கொடுக்கும் விதமாக இந்தியாவின் வர்த்தகம் அமைந்து இருப்பதாக டிரம்பின் நிர்வாகம் குற்றம் சாட்டி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு பயப்படாமல் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications