'வெறும் 4 மாதங்கள்தான் வேக்சின் ஆன்டிபாடிகள்.. ' இந்தியாவில் நடந்த ஆய்வில் ஷாக் தகவல்..ஏன் முக்கியம்
புபனேஷ்வர்: கொரோனா வேக்சின் போடப்பட்ட முதல் நான்கு மாதங்களிலேயே வைரஸ் தடுப்பாற்றல் குறிப்பிட்ட அளவு குறைவது ஒடிசாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் வேக்சின்கள் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றன.

வேக்சின் பணிகள்
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் முதலில் தொடங்கப்பட்டது. முன்களப் பணியாளர்களுக்கு முதலில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் வேக்சின் போட்டு முடிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்தியாவில் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் கொரோனா தடுப்பூசிகளால் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகள் குறைந்த காலமே மட்டுமே இருப்பதாகவும் வெளிநாடுகளில் நடந்த ஆய்வுகளில் தெரிய வந்தன.

4 மாதங்கள் தான்
இந்தச் சூழலில் கொரோனா ஆன்டிபாடிகள் குறித்து இந்தியாவில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. ஒடிசாவில் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் ஆன்டிபாடிகள் சோதனை செய்யப்பட்டது. தடுப்பூசி போட்ட நான்கு மாதங்களில் அவர்களின் ஆன்டிபாடிகள் குறிப்பிடத்தகுந்த அளவு குறைவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் முடிவுகளை முழுமையாக வெளியாகும்போது யாருக்கு எப்போது பூஸ்டர் டோஸ் தேவை என்பது குறித்துத் தெளிவாக முடிவெடுக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

என்ன அர்த்தம்
அதேநேரம் உடலில் ஆன்டிபாடிகள் குறைவது என்பது ஒருவரது உடல் நோயை எதிர்கொள்ளும் திறனை இழக்கிறது என்று அர்த்தமல்ல. ஏனெனில் உடலில் இருக்கும் செல்கள் அந்த ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் முறையை ஞாபகத்தில் வைத்திருக்கும். எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்படும்போது நமது செல்கள் தேவையான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கும். இதன் மூலம் கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்படும்.

நாடு முழுவதும் சோதனை நடத்த வேண்டும்
இது குறித்து புவனேஸ்வரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சங்கமித்ரா பதி கூறுகையில், "பூஸ்டர் டோஸ் தேவைப்படுமா இல்லை என்பது குறித்து இப்போது எதுவும் தெளிவாகச் சொல்ல முடியாது. ஆறு மாதங்களுக்குப் பிறகே தெளிவாகச் சொல்ல முடியும். இந்தியா முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதன் தரவுகளைக் கொண்டு முடிவு எடுத்தால் மட்டுமே சரியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த மாதம் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்விலும் பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் ஆறு மாதங்கள் மட்டுமே பாதுகாப்பை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பூஸ்டர் டோஸ்
ஐரோப்பியா உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், உலகில் வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் உள்ள அனைவருக்கும் வேக்சின் போட்டு முடிக்கும் வரை, வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்கக் கூடாது என்றும் முதலில் உலகிலுள்ள அனைவருக்கும் 2 டோஸ் வேக்சின் பணிகளை முடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் இதுவரை பூஸ்டர் டோஸ் குறித்து எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications