For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம்

By BBC News தமிழ்
|
மு.க.ஸ்டாலின்
BBC
மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "தேசியக் கல்விக் கொள்கை தெரிவிப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என தி.மு.க அரசை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். என்ன நடக்கிறது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பட்டப்படிப்பு நிறைவு செய்த தன்னார்வலர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

"இல்லம் தேடி கல்வி" பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்கள், தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என புதுமையான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்க உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கற்பித்தல் மையங்கள் அனைத்தும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையிலும் பள்ளி மாணவர்கள் அணுகக் கூடிய வகையிலும் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோதி ஸ்டாலின்
TNDIPR
மோதி ஸ்டாலின்

பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இந்த வகுப்புகள் செயல்பட உள்ளன. மேலும், பிளஸ் 2 வரையில் படித்த மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க உள்ளனர்.

இதன்படி, மொத்தமாக 17 லட்சம் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்துக்காக தேவைப்படுகிறார்கள். தொடர்ந்து ஆறு மாதத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பழைய கள், புதிய மொந்தையா?

தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும் சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி உருவாக்கப்பட்ட மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே தி.மு.க அரசு அறிவித்துள்ளது. "

"இந்தநிலையில், நமது பள்ளிக் கல்வித் துறை அதனை தெரிந்தோ, தெரியாமலோ 'பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது என்பது மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாக உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது, அதிர்ச்சியாகவும் உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவுதான்," என்கிறார்.

வீரமணி
BBC
வீரமணி

"ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான 'திறனறித் தேர்வு' பற்றி சில நாள்களுக்குமுன் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அதுபற்றிய விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அது சாதாரணமாக மதிப்பெண் போடப்பட்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது, அதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற ஒரு விளக்கத்தைக் கூறினாலும், நம்மால் அதனைக் கேட்டு திருப்தி அடைய முடியவில்லை. காரணம், அத்திட்டத்தை இயக்குபவர்கள் அதில் சி.பி.எஸ்.இ என்பது குறிப்பிடப்பட்டு, மறைமுகமாக நமது மாநில உரிமையில் தலையிட்டு அதன்மூலம் கல்விக் கொள்கையில் செயலாக்கவே என்பது விளங்குகிறது' என்கிறார் வீரமணி.

"சர்க்கரைப் பூச்சுள்ள விஷ உருண்டை"

"கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வோர் ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை - 2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது. இதனை தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத்தகுந்தது.

இந்தத் திட்டத்தின்படி, ஒன்று முதல் 5ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, பிளஸ் டூ படித்தவர்களையும் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம்'' என்று கூறியிருப்பது, யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம். அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே இல்லம் தேடி கல்வித் திட்டம். இதில், தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கும் அதற்கும் சம்பந்தம் உள்ளதா?

ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தை தி.மு.க செயல்படுத்துவதாக கி.வீரமணி கூறுவது சரியானதா?" என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கல்வி, ஏழை மாணவர்களுக்குச் சென்று சேரவில்லை. இதனால் கற்றலுக்கான இடைவெளியைப் போக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வியின் மூலம், ஏற்கெனவே உள்ள பாடத்திட்டங்களின்படிதான் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இது முழுக்க அரசு ஆசிரியர்கள் மற்றும் உள்ளூரில் உள்ள படித்த இளைஞர்களால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படிதான் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அவர்கள் சொல்வதுபோல வாழ்வியல் கல்வியோ, தொழிற்கல்வியோ கற்றுக் கொடுக்கப் போவதில்லை" என்கிறார்.

மு.க.ஸ்டாலின்
Getty Images
மு.க.ஸ்டாலின்

மேலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இடையே இடைவெளி வந்துவிடக் கூடாது, அதன்மூலம் இடைநிற்றல் வந்துவிடக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். இடைவெளி அதிகமானால் மாணவர்களிடையே மனச்சோர்வு அதிகமாகும். இதற்காக, பேரிடர் காலங்களில் வகுப்பறைக்கு வர முடியாத மாணவர்களுக்காக பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு, அரசுப் பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்கள்தான். அதைத்தான் இல்லம் தேடி கல்வி' என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது. பள்ளிப் பாடப்புத்தகத்துக்கு வெளியே உள்ள, அதாவது அவர்கள் அறிமுகப்படுத்திய வாழ்வியில் கல்வியோ, தொழிற்கல்வியோ இல்லை. இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. " என்கிறார்.

"வீரமணியின் கருத்து ஏற்புடையதல்ல"

"தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை தனித்தனியாக செயல்படுத்துவது போல உள்ளது என்கிறாரே வீரமணி?" என்றோம். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கு வர முடியாதவர்களுக்கான திட்டமே தவிர, தேசியக் கல்விக் கொள்கையை தி.மு.க ஏற்கவில்லை. தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, மதக் கல்வி, பண்பாட்டுக் கல்வி என மத்திய அரசு சொல்கிறது. அதுகுறித்து இங்கே பேசப்படவில்லை" என்கிறார்.

"ஆர்.எஸ்.எஸ். திட்டத்துக்கு தி.மு.க அடிபணிந்துவிடக் கூடாது என்கிறாரே?" என்றோம். அது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதம் அல்ல. அவர்கள் அச்சப்படுகிறார்கள். தி.மு.க இதில் தெளிவாக உள்ளது. இந்தத் திட்டத்துக்கு, கலைஞரின் எழுத்து இயக்கம்' என்றுதான் பெயர் வைத்துள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போட முடியாத அளவுக்கு கற்றல் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அதனை இன்னும் எளிமைப்படுத்திக் கொண்டு செல்கிறோம். இதனைக் கொண்டு சேர்ப்பவர்கள், தன்னார்வலர்கள் அல்ல. முழுக்க தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோரின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்கிறார்.

மாணவர்கள்
Getty Images
மாணவர்கள்

மத்திய அரசின் திட்டம்தான், ஆனால்?

"கி.வீரமணியின் கருத்தை பா.ஜ.க எப்படிப் பார்க்கிறது?" என அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். கல்வி கற்றோரின் எண்ணிக்கை 100 சதவிதமாக மாற வேண்டும், அனைவருக்கும் கல்வியைத் தர வேண்டும் என்பது யாருடைய திட்டமாக இருந்தாலும் வரவேற்க வேண்டும். அது ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டமாக இருந்தால் அந்த அமைப்பு மிக நல்ல இயக்கம் என்பதாகத்தான் பார்க்க வேண்டும். இதனை எதிர்க்கிறார்கள் என்றால், இவர்களை கல்வி வளர்ச்சிக்கு எதிரானவர்களாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டை கல்வியறிவற்ற மாநிலமாக வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பரப்ப நினைக்கிறார்கள்" என்கிறார்.

"இதுநாள் வரையிலும் கல்வித் திட்டத்தை யார் வடிவமைத்தது? கடந்த 40 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்தது யார்? இவர்கள் அமைத்த பாடத்திட்டத்தின்மீது இவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் பிஞ்சுக் குழந்தைகளின் மீது நஞ்சை விதைத்துவிடும் என சந்தேகப்படுகிறார்கள். கல்வியில் அவநம்பிக்கையை விதைத்தது இவர்கள்தான். அதனைப் போக்கும் வகையிலேயே தற்போதைய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

தற்போது தி.மு.க செயல்படுத்தும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். அதனை தனது சொந்தப் பெயரில் தி.மு.க பயன்படுத்துகிறது. அதற்கான நிதி, திட்டம் எல்லாமே மத்திய அரசுக்குச் சொந்தமானது. அவர்கள் எந்தப் பெயரில் வேண்டுமானாலும் செயல்படுத்திக் கொள்ளட்டும். அதனை பா.ஜ.க பொருட்படுத்தவில்லை. அதன்மூலம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால் போதும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
The Government of Tamil Nadu has introduced a new program called illam thedi kalvi to reduce the learning gap of school children. K. Veeramani, the leader of the Dravidar League, criticized the DMK government, saying, "The plan is to implement the national education policy as it stands." whats going on?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X