அமைச்சரவையை கூட விரிவாக்கம் செய்ய முடியவில்லையே இந்த முதல்வருக்கு!
பெங்களூர்: கர்நாடக அரசியல் ஏற்பட்டுள்ள குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக கூட்டணி ஆட்சியில் மீண்டும் ஒருமுறை அமைச்சரவை விரிவாக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உட்கட்சிப் பூசல் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் வரை கர்நாடக அரசு தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகங்களை அங்கு நிகழும் மாற்றங்கள், மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமைச்சரவை காலியிடங்கள்
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக உள்ளார். அமைச்சரவையில் இன்னும் ஆறு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

25 பேர் போட்டி
இம்மாத இறுதிக்குள் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபட்டு வந்தார். ஆனால் அமைச்சர் பதவிக்கு 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முட்டி மோதிக்கொண்டு உள்ளனர்.

எதிர்க்கட்சியுடன் நட்பு
பதவி கிடைக்காதவர்கள் பாரதிய ஜனதாவுடன் கை கோர்த்து விடக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அமைச்சரவை விரிவாக்கம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரசில்தான் அதிக கோஷ்டி
அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குள் தான் அதிக உரசல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே உட்கட்சிப் பூசலால் எடியூரப்பாவுடன் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பு கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போயுள்ளதை வைத்து பார்க்கும்போது கர்நாடக கூட்டணி அரசில் எதுவுமே நல்லபடியாக செல்லவில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
