For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் பிற மாநில வாகனங்களுக்கு அடாவடி வரி: வெகுண்டெழுந்த கேரளா, தட்டி கேட்காத தமிழக அரசு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில், வெளி மாநில வாகனங்கள் நுழைந்தாலே, ஆயுட்கால வரி விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வரி விதிப்பால் பெங்களூரில் பணியாற்றும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக அரசின் இந்த தன்னிச்சையான போக்குக்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் சார்பில் எந்த வித எதிர்ப்பும், வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை.

அதிகபட்சம் ஒரு மாதம்தான்

அதிகபட்சம் ஒரு மாதம்தான்

ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை மற்றொரு மாநிலத்தில் அதிகபட்சமாக 6 மாதகாலம் இயக்கிக்கொள்ளப்படலாம். அதன்பிறகும் இயக்க வேண்டுமானால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு உரிய வரியை கட்ட வேண்டும். ஆனால் கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து, இந்த காலக்கெடுவை 1 மாதங்களாக குறைத்துவிட்டனர். அதாவது, அதிகபட்சம் 1 மாதம் மட்டுமே பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை கர்நாடகாவில் வரி செலுத்தாமல் இயக்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி 1 மாதத்திற்கும் மேல் இயக்கும் வாகனங்களுக்கு ஆயுள் கால வரி செலுத்த வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பணத்த கொடு, வண்டிய எடு..

பணத்த கொடு, வண்டிய எடு..

இந்த சட்ட திருத்தத்தை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. வெளி மாநில பதிவு எண் கொண்ட காரோ, பைக்கோ எதுவாக இருந்தாலும் மடக்கி பிடிக்கும் அதிகாரிகள், ஆயுள் கால வரி கேட்டு துன்புறுத்த தொடங்கிவிட்டனர். ஆயுள் கால வரி என்பது ஒரு வாகனத்தின் ஷோரூம் விலையில் சுமார் 14 சதவீதம் இருக்கும் என்பதால், விழி பிதுங்கி போகிறார்கள் பிற மாநில வாகன உரிமையாளர்கள்.

நுழைந்த உடனேயே வரி

நுழைந்த உடனேயே வரி

பெங்களூரில் பணி நிமித்தமாகவும், அல்லது மருத்துவமனைகளில் குடும்பத்தாரை சேர்த்துவிட்டு அவர்களுக்கு துணையாகவும் இருக்க வரும் வெளி மாநிலத்தவர்கள் ஏராளம். அவர்கள் ஒரு மாதம் அல்லது மூன்று, நான்கு மாதங்கள் கூட பெங்களூரில் இருக்க வேண்டிவரும். ஆனால் அவர்களிடமும் வரி வசூலிக்கிறது போக்குவரத்து காவல்துறை. காரணம், புதிய சட்டம். சில நேரங்களில் பெங்களூருக்கு வந்து ஒருநாள் ஆகாத பிற மாநில வாகனங்களுக்கும் ஆயுள் வரி விதிக்கின்றனர்.

ஆதாரம் அவசியமாம்

ஆதாரம் அவசியமாம்

வரி செலுத்த அதிகாரிகள் மிரட்டியதும், வாகன உரிமையாளர்களோ என்ன செய்வது என்று தெரியாமல், தங்களது மாநிலத்தில் சமீபத்தில் பெட்ரோல் போட்டதற்கான ரசீது, எமிசன் செய்த ரசீது போன்றவற்றை எடுத்து காண்பிக்கின்றனர். ஆனால் அதையும் கிழித்து போட்டுவிட்டு வரி கேட்பதாகவும் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல வாகன உரிமையாளர்கள், ஒரு வாரம், இரண்டு வாரம் பெங்களூர் போய் வருவதற்கு எதற்கு பெட்ரோல் ரசீது என்று நினைத்து அதுபோன்ற எந்த ஆதாரரங்களையும் தங்களுடன் வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் நிலை அதோ கதிதான்.

பலே வசூல்

பலே வசூல்

சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகு, போலீசாரின் கெடுபிடியால் போக்குவரத்து துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளது. இந்தாண்டில் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில், 5298 வெளி மாநில வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி அல்லது அபராதம் என்ற வகையில் ரூ.20 கோடி வசூலாகியுள்ளதாம். வரி செலுத்த முடியாத வாகன உரிமையாளர்களிடமிருந்து 1,181 வாகனங்களை இந்த காலகட்டத்தில், அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷனால் பிரச்சினை

புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷனால் பிரச்சினை

கர்நாடக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டதற்கு, புதுச்சேரி மாநிலத்தில் வாகன பதிவு வரி குறைவு என்பதால் கர்நாடக வாகன உரிமையாளர்கள் பலரும் அம்மாநிலத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்துவிட்டு எங்கள் மாநிலத்தில் இயக்கிக்கொள்கின்றனர். இதனால் எங்களுக்கு வரி இழப்பு ஏற்பட்டது. எனவேதான், 1 மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் இயங்கும் வெளி மாநில வாகனங்களுக்கு ஆயுள் வரி வசூலிக்கிறோம்.

வாங்குற மாதிரி வாங்கிட்டு கொடுத்திடுவோம்

வாங்குற மாதிரி வாங்கிட்டு கொடுத்திடுவோம்

ஆயுட்கால வரியை செலுத்தும், வாகன உரிமையாளர்கள், தங்களது மாநிலத்துக்கு மீண்டும் திரும்பி செல்லும்போது, மிச்ச பணத்தை வாங்கிக்கொள்ளலாம். அதாவது, எத்தனை மாதங்கள் கர்நாடகாவில் அந்த வாகனம் இயக்கப்பட்டுள்ளதோ அதை தவிர்த்துவிட்டு மிச்ச பணத்தை திரும்ப கொடுத்துவிடுவோம் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போதுள்ள நடைமுறையில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு அதை பெறுவது என்பது குதிரை கொம்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனவேதான் இந்த 1 மாத காலக்கெடுவை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கேரளா அபார வேகம்

கேரளா அபார வேகம்

கர்நாடகாவில் அதிகாரிகள் தொல்லைக்கு உள்ளான கேரளாக்காரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள முதல்வர் அலுவலகத்துக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். புகார் கிடைக்கப்பெற்ற அடுத்த நாளே, அதாவது, திங்கள்கிழமை, கேரள போக்குவரத்து துறை கமிஷனர் ஆர்.ஸ்ரீலேகாவை பெங்களூர் அனுப்பி வைத்தார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. ஸ்ரீலேகா பெங்களூரில், கர்நாடக போக்குவரத்து துறை கமிஷனர் ராமேகவுடா உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தங்களது மாநிலத்தின் எதிர்ப்பை பதிவு செய்தார்.

உம்மன் சாண்டி கடிதம்

உம்மன் சாண்டி கடிதம்

அதிகாரிகள் ஆலோசனை ஒருபக்கம் என்றால், உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி, வரி விதிப்பு நடைமுறையை மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார். 1 மாத காலக்கெடுவை ஆறு மாதமாக அதிகரியுங்கள், அல்லது ஆயுட் கால வரிக்கு பதிலாக ஓராண்டு, ஈராண்டுக்கான வரியை மட்டும் வசூலியுங்கள் என்று உம்மன் சாண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

சபாஷ் உம்மன் சாண்டி

சபாஷ் உம்மன் சாண்டி

கேரளா சார்ந்த பிரச்சினை என்றால் உம்மன் சாண்டி உடனடியாக நடவடிக்கை எடுப்பதும், துடித்து போவதும் இது முதல் முறை கிடையாது. மைசூர்-கோழிக்கோடு சாலையில், பந்திப்பூர் வன விலங்கு சரணாலயம் வழியாக இரவு நேரத்தில் வாகனங்களை இயக்க கர்நாடக அரசு தடை விதித்தபோது 3முறை பெங்களூர் வந்து கர்நாடக முதல்வர்களை (சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், சித்தராமையா) சந்தித்து தடையை விலக்க கோரியவர் உம்மன் சாண்டி. கேரள நர்சுகள் கடத்தப்பட்டபோதும், கேரளாவை சேர்ந்தவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக்கொன்றபோதும் அவர் காட்டிய வேகம் பாராட்டை பெற்றது.

தமிழர்களுக்கே அதிக பாதிப்பு

தமிழர்களுக்கே அதிக பாதிப்பு

பெங்களூரில் மலையாளிகளைவிட பெருவாரியாக தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் வசிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, மைசூர், கோலார் தங்கவயல், ஹாசன், மங்களூர், ஷிமோகா ஆகிய நகரங்களிலும் தமிழர்கள் கணிசமாக உள்ளனர். பெங்களூரிலுள்ள தமிழர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஐடி நிறுவனங்களிலும், பிற தொழில் நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்கள். பிற மாநில வாகனங்கள் மீதான கர்நாடகாவின் கெடுபிடி மலையாளிகளைவிட தமிழர்களையே அதிகம் பாதிக்கிறது.

என்ன சத்தத்தை காணோம்

என்ன சத்தத்தை காணோம்

இருப்பினும் கர்நாடகாவின் இந்த கெடுபிடி குறித்து தமிழக அரசு சார்பில் வாய் திறக்கவில்லை. இத்தனைக்கும் கர்நாடகாவில் அதிமுக, திமுக கட்சிகளின் கிளை செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது. இரு கழகங்களில் இருந்தும் ஒரு காலத்தில் கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காங்கிரசில் அடிமட்ட நிர்வாகிகளில் பலரும் தமிழர்கள்தான். ஆயினும் தமிழக முதல்வருக்கோ, போக்குவரத்து அமைச்சருக்கோ இதுகுறித்த தகவல் இன்னுமா சென்று சேரவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இதுவேறையா?

ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இதுவேறையா?

காவிரி பிரச்சினை, கோர்ட் வழக்கு என ஏற்கனவே தமிழக அரசுக்கும், கர்நாடகாவுக்கும் பிரச்சினை இருப்பதால் தமிழர்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமல் விட்டுவிட தமிழக அதிகாரிகள் துணிந்து விட்டனரா என்ற சந்தேகமும் எழுகிறது.

பேஸ்புக்கில் வறுக்கலாம்

பேஸ்புக்கில் வறுக்கலாம்

கர்நாடக அரசின் இந்த கெடுபிடியை எதிர்க்க கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலத்து வாகன உரிமையாளர்கள் இணைந்து பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளனர். Justice for Non KA registration Vehicle Owners என்ற பெயரிலான அந்த பேஸ்புக் பக்கத்தில் இணைந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புவோர் https://www.facebook.com/groups/nonkablr/?fref=ts என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

English summary
Dispatches official to Bangalore for a powwow after receiving a plea on harassment of KL-registered vehicles in the city, while on a visit on Sunday. Kerala has become the first state to officially protest Karnataka's targeted drive against outstation registered vehicles plying or in transit through the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X