கேரளாவில் காங். தலைவர் அட்டூழியம்.. தமிழக தம்பதியை கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. கைது
தமிழக பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த காங் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
வயநாடு: தமிழக பெண்ணுக்கு லாட்ஜில் செக்ஸ் தொல்லை தந்த கேரள காங்கிரஸ் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள அம்பல வயலில் ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜில் கோவையை சேர்ந்த இளம்பெண் கணவருடன் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று அந்த பெண், கணவருடன் லாட்ஜ் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன், தம்பதியிடம் வம்பு செய்து, அந்த பெண்ணையும், கணவரையும் நடுரோட்டிலேயே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதை சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்ததுடன், செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டு அதை இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ, கேரள மாநில மகளிர் ஆணைய தலைவியின் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து தம்பதி நடுரோட்டில் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், அதற்குள் சஜீவானந்தனும், லாட்ஜ் ஓனர் விஜயகுமாரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனிடையே தமிழக பெண் கேரளாவில் தாக்கப்பட்ட தகவல் கோவை போலீசாருக்கு கிடைத்ததும் உடனடியாக கேரளாவுக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான், லாட்ஜ் ஓனர் விஜயகுமார், சஜீவானந்தன், அவரது நண்பர் உட்பட 3 பேருமே லாட்ஜில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அம்பலவயல் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு லாட்ஜ் ஓனர் விஜயகுமாரை கைதுசெய்தனர். ஆனால் சஜீவானந்தம் எங்கிருக்கிறார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தது. மேலும் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்திருந்தார் சஜீவானந்தம்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் புதூர் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் சஜீவானந்தம் பதுங்கி உள்ளதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் கர்நாடகா சென்று சஜிவானந்தனை கைது செய்து, அம்பல வயல் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு சஜிவானந்தன் தாக்கல் செய்த மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications