'இந்திரா' காந்தி கோட்டை- 72.23% வாக்குகளை வென்ற சோனியா-ராகுல் போட்டியிடும் "ரேபரேலி" சரித்திரம்!
ரேபரேலி: லோக்சபா தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். பாட்டி இந்திரா, அம்மா சோனியா ஆகியோர் வெற்றிக் கொடி நாட்டிய நேரு குடும்பத்தின் கோட்டையில் பேரன் ராகுல் காந்தி சரித்திரத்தைத் தொடருவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பு.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதிக்கு மே 20-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் பெரும் இழுபறி நீடித்தது. ஒருவழியாக தற்போது ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

பெரோஸ் காந்தி: ரேபரேலி தொகுதியானது காங்கிரஸ் அல்லது நேரு- இந்திரா குடும்பத்தின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். 1952, 1957 தேர்தல்களில் நேருவின் மருமகன் - இந்திராவின் கணவர்- ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தி போட்டியிட்டு எம்பியாக இருந்தார்.
எமர்ஜென்சிக்கு காரணமான ரேபரேலி: 1967-ல் ரேபரேலி லோக்சபா தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்றார். 1971-ல் மீண்டும் இந்திரா வென்றார். 1971 தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திராவின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்தான் நாட்டில் அவசரநிலை எனும் எமர்ஜென்சியை அமல்படுத்தப்பட்டது. 1977-ல் ரேபரேலியில் இந்திராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ராஜ்நாராயணன் போட்டியிட்டு வென்றார்.
மீண்டும் இந்திரா காந்தி: ஆனால் 1980-ல் இந்திரா காந்தியே மீண்டும் ரேபரேலியில் போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றார். 1980-ல் இந்திரா காந்தி ரேபரேலி மற்றும் அன்றைய ஆந்திராவின் மேடக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். பின்னர் ரேபரேலி தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 1984-ல் இந்திரா காந்தி அம்மையார் சுட்டுப் படுகொலை செய்யப்படும் வரை மேடக் தொகுதி எம்பியாகவே இருந்தார்.
அருண் நேரு: 1984-ல் இந்திரா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த அருண் நேரு போட்டியிட்டு வென்றார். 1989, 1991-ல் காங்கிரஸ் வேட்பாளராக ஷீலா கவுல் போட்டியிட்டு வென்றார். ஆனால் 1996, 1998-ல் பாஜக வேட்பாளர் அசோக் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சோனியா காந்தி: ஆனால் 1999 லோக்சபா தேர்தலில் சதீஷ் ஷர்மா வென்று மீண்டும் காங்கிரஸ் கட்சி ரேபரேலியை கைப்பற்றியது. 2004 முதல் 2019-ம் ஆண்டு வரை சோனியா காந்தி, ரேபரேலியில் போட்டியிட்டு வென்றார்.
ராஜ்யசபா எம்பியான சோனியா: தற்போது சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் நேரு குடும்பத்தில் இருந்து யார் வேட்பாளர் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இத்தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டது.
ராகுல் காந்தி: ஆனால் புதிய திருப்பமாக ராகுல் காந்தியே ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, 2019-ல் அங்கு தோல்வியைத் தழுவினார். அப்போது கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் வென்றார் ராகுல். தற்போதும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி 2-வது தொகுதியாக ரேபரேலியிலும் களம் காண்கிறார்.












Click it and Unblock the Notifications