
ஜி 20 முத்திரையில் “தாமரை”.. அது கட்சி சின்னமாச்சே? ஆனாலும் இதுபற்றி பேச வேணாம் - “சாந்தமான” மம்தா
கொல்கத்தா: ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதன் லோகோவில் தாமரை சின்னம் ஏன் இடம்பெற்று உள்ளது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட ஜி20 ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
இதற்காக கொல்கத்தாவில் இருந்து டெல்லி புறப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியிடம், ஜி20 லோகோவில் தாமரை சின்னம் இடம்பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஜி20.. முகம் முழுக்க பொங்கி வழியும் சிரிப்பு.. டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

நாட்டுக்கு நல்லதல்ல
இதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் வெளியில் விவாதிப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்பதால் அதை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். நானும் தாமரை சின்னத்தை பார்த்தேன். நாட்டு நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் நம்மால் எதுவும் கருத்து சொல்ல முடியாது. அதே நேரம் மத்திய அரசு தாமரை சின்னத்துக்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு தேசிய சின்னத்தை பயன்படுத்தி இருக்கலாம்.

அரசியல் கட்சியின் சின்னம்
இந்த தாமரை சின்னம் ஒரு அரசியல் கட்சியை பிரதிபலிக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. நாட்டிற்கு எத்தனையோ தேசிய சின்னங்கள் இருக்கின்றன. அதை ஜி20 லோகோவில் வைத்து இருக்கலாம். இருந்தாலும் டெல்லியில் நான் இதை பற்றி பேசப்போவது கிடையாது. வேறு யாராவது இந்த விவகாரத்தை அங்கு எழுப்பலாம்.

மத்திய அரசு சிந்திக்க வேண்டும்
நான் ஜி20 லோகோவில் தாமரை சின்னம் இடம்பெற்று இருப்பதை பார்த்தாலும், அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. இதை ஒரு பிரச்சனை இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியாது. இது ஒரு மிக முக்கியமான விசயம். மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து யோசிக்க வேண்டும்." என்றார்.

இந்தோனேசியா மாநாடு
ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிடம் இருக்கும். நடப்பு 2022 ஆம் ஆண்டின் தலைமை பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்தது. தலைமை யாரிடம் உள்ளதோ அந்த நாட்டில் அந்த ஆண்டுக்கான ஜி20 மாநாடு நடத்தப்படும். அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் நடைபெற்றது.

இந்தியாவிடம் தலைமை பதவி
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த மாநாட்டில் கொள்கை, கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, அதன் பின்னர் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.

இந்தியாவிடம் தலைமை
இதில் பங்கேற்ற உலக நாடுகளில் தலைவர்கள் உலகில் நிலவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள், கொரோனா, பொருளாதாரம், பருவ நிலை, போர்கள், சர்வதேச பயங்கரவாதம் குறித்து ஆலோசித்தார்கள். இந்த மாநாட்டின் இறுதியில் ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒருநாடு இதன் தலைமை பதவியை இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.