1+2+3 மொத்தம் 7 பேர்.. ஒரே பைக்.. பரபரப்பான சாலையில் ஆபத்தான பயணம்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
மும்பை: மும்பையில் பரபரப்பான சாலையில் குழந்தைகள் உள்பட 7 பேரை ஏற்றிக்கொண்டு பைக்கில் ஆபத்தான முறையில் ஒருவர் சென்றது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இந்தியாவில் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து விதி மீறல்கள்தான். எனவே, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தி விபத்துக்களை குறைப்பதில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக பல்வேறு தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படுவதோடு..விதிகளை மீறி வாகனம் ஒட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
புதிய மோட்டார் வாகன சீர்திருத்த சட்டப்படி சிறிய விதி மீறல்களுக்கு கூட கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் போக்குவரத்து போலீசார் தீவிரமாக விதி மீறல்களை கண்காணித்து விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இதற்கு ஒரு படி மேலே போய், அதி நவீன செயற்கை நுண்ணறிவு கேமரா மூலமாக விதி மீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன.

இப்படி அரசுகள் போக்குவரத்து விதி மீறலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் விதி மீறல்கள் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலைகளில் இளைஞர்கள் பலர் பைக்கில் சாகசங்கள் செய்தபடி பயணிப்பதும் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செல்வதை காண முடியும்.
போலீசார் இதுபோன்ற சாலைகளில் சாகசம் செய்பவர்களை மடக்கி பிடித்து ஃபைன் அடித்தாலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இளைஞர்கள் தான் இப்படி விதி மீறலில் ஈடுபடுகிறார்கள் என பொதுவாக சொல்லிவிட முடியாது. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பெரியவர்களும் இப்படி விதி மீறலில் ஈடுபடுவது கூடுதல் வேதனைக்கு உரிய ஒன்றாகவே உள்ளது. மும்பையில் இதுபோன்ற சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.
இரு சக்கர வாகனத்த்தில் 3 குழந்தைகள் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 7 பேரை ஏற்றிக்கொண்டு மும்பையில் ஒருவர் சென்றது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மும்பையின் பரபரப்பான சாலையில் குழந்தைகளை வைத்து ஆபத்தான பயணத்தை முனவர் ஷா என்பவர் மேற்கொண்டு இருந்தார். 2 குழந்தைகள் முன்பக்கம் நின்ற படியும் 3 பேர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டும், மேலும் இரு சிறுவர்கள் பின்பக்கம் உள்ள கம்பியில் நின்ற படியும் சென்றனர்.
இதை சக வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், வாகனத்தின் எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடினர். அதன்படி பைக்கை ஓட்டிச் சென்ற முனவர் ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்ற 7 பேரில் 4 குழந்தைகள் அவரது பிள்ளைகள் என்றும் மீதம் உள்ள 3 பேர் பக்கத்து வீட்டு பிள்ளைகள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications