For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்': தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

By BBC News தமிழ்
|
ஸ்டாலின்
Getty Images
ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் வரிகளே காரணம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். மத்திய அரசின் வரி விதிப்பு முறை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக மாநில அரசுகள் தங்களது வரியைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேற்று கூறியிருந்த நிலையில், இது குறித்து தமிழக சட்டப்பேரவையிலும் இன்று விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல என்று குற்றம்சாட்டினார்.

"பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் இந்தப் பொருட்களின் மேல் தாங்கள் விதிக்கக்கூடிய வரிகளை மாநில அரசுகள் குறைக்காத காரணத்தால்தான் பெட்ரோல், டீசல் விலையை நாட்டில் குறைக்க முடியவில்லை என்றும் பிரதமர் நேற்றைக்குக் குறிப்பிட்டுக் பேசியிருந்தார். இதனைப்பற்றி நான் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், அவர் இந்தக் கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற்போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படக்கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்கக்கூடியது என்ற காரணத்தால், அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கை வைத்தது மத்திய அரசு.

பெட்ரோல்
Getty Images
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக்கூடிய தலவரியையும் தலமேல்வரியையும், மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கத் தேவையில்லை என்பதால் இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற காரணத்திற்காக இந்தத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு. தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரமே மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியிருக்கிறது மத்திய அரசு.

ஆனால், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு குறைப்பதற்கு முன்பாகவே பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது தமிழக அரசு.

இவையனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து, பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டு விடுகிறேன்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதற்குப் பிறகு பேசிய மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டினார்.

"2014ல் தற்போதுள்ள பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான வரி ரூ. 9.40. அதில் பெரும்பகுதி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது, அதாவது ஐந்து ரூபாயைக் குறைப்பதற்கு முன்பாக, பெட்ரோல் மீதான வரி 32 ரூபாய். ஆகவே அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோல் மீதான வரி 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

அவர்கள் ஆட்சிக்கு வரும்போது டீசல் மீது ரூ. 3.47 வரியாக விதிக்கப்பட்டது. இப்போது பத்து ரூபாய் வரி குறைக்கப்பட்ட பிறகும், மத்திய அரசின் வரி 22 ரூபாய்க்கு மேலே இருக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட ஏழு மடங்கு வரியை உயர்த்தியிருக்கிறார்கள். டீசல் மீதான வரி மாநில அரசால் 50 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

எப்போதெல்லாம் அவர்கள் வரியை அதிகரித்தார்களோ, அப்போதெல்லாம் நாமும் அதிகரித்திருந்தால் அவர்கள் ஒரு மடங்கு குறைக்கும்போது நாமும் ஒரு மடங்கு குறைக்கலாம். அவர்கள் அதிகரிக்கும்போது நாம் அதிகரிக்காத நிலையில், அவர்கள் குறைக்கும்போது நாம் குறைக்க வேண்டுமென்றால் அது நியாயமில்லை.

எந்த மாநிலமும் குறைக்கவில்லையென்று சொல்வது தவறு. அவர்கள் குறைக்கும் முன்பே நாம் இங்கே குறைத்திருக்கிறோம்." என்று விளக்கமளித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

இதற்குப் பிறகு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "மொத்த வரி வருவாயில் 20 சதவீதம் செஸ், சர்சார்ஜாக விதித்துவிட்டு, மாநிலத்திற்குக் கொடுக்காமல் இருப்பதுதான் கூட்டாட்சித் தத்துவமா? நம்முடைய முழு நிதியைச் செலவழித்து மருத்துவக் கல்லூரிகள், கல்லூரிகள், அணைகளை நடத்தும்போது என் விதிகளின்படிதான் நடத்தவேண்டும் என்று சொல்வது கூட்டாட்சித் தத்துவமா?

ஒரு காலத்தில் ஒரு ரூபாய் வரி தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்குப் போனால், 60 பைசா திரும்ப வந்துகொண்டிருந்தது. இன்று 35 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. இந்த முப்பத்தைந்து பைசாவையும் பல்வேறு திட்டங்களுக்காகச் செலவழிக்கச் சொல்கிறார்கள். இது கூட்டாட்சித் தத்துவமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோதி பேசியது என்ன?

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது குறித்து பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்களுடன் பிரதமர் மோதி நேற்று கலந்துரையாடினார். அப்போது பெட்ரோல் டீசல் மீதான வரியை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் குறைக்க தயாராக இல்லை என்று தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

"பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு. அதேபோல மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். சில மாநிலங்கள் வரியை குறைத்தன. சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை" என்று குறிப்பிட்டார் பிரதமர் மோதி.

மகராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையை கேட்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார் என ஏஎன் ஐ செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நவம்பரில் என்ன செய்திருக்க வேண்டுமோ அதை தற்போது செய்ய வேண்டும் என இந்த மாநிலங்களை நான் வலியுறுத்துகிறேன் என்றும் மோடி தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=8Ds8r9HyYLQ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
modi government is the only reason for petrol price hike, not tn govt, says cm mk stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X