ம.பி ராமநவமி கலவரம்! கலவரகாரர்களின் சொத்துக்களை இடிக்க ”புல்டோசர் ஆக்ஷன்”..யோகி எவ்வழி சவுகான் அவ்வழி
போபால் : ராம நவமியை ஒட்டி மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏற்பட்ட மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் சொத்துக்களையும் இடித்துத் தள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமரின் பிறந்தநாளான ராம நவமி நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், மும்பை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன.
மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற ஊர்வலம் வேறொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் சென்றுள்ளது.

கார்கோன் கலவரம்
ஊர்வலத்திற்கிடையே ஒலிப்பெருக்கிகளை சத்தமாக இசைப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊர்வலம் பாதியிலேயே தடைபட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராம நவமி ஊர்வலம்
இதே போன்று குஜராத் மாநிலம், காம்பத் மற்றும் ஹிம்மத் நகரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. கம்பாத் பகுதியில் நடைபெற்ற மோதலில் 65 வயது முதியவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். இரு பகுதிகளிலும் கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அதிரடி உத்தரவு
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏற்பட்ட மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் சொத்துக்களையும் இடித்துத் தள்ள சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு வெளியே புல்டோசர்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு, இடிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கலவரக்காரர்களிடம் இருந்து இழப்பை அரசு வசூலிக்கும் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் வழி
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளன. மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காவி நிறமாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அடாவடித்தனம் செய்வோருக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கைகள் மிகப் பிரபலம். பல நேரங்களில் குற்றவாளிகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலின்போது பிரசாரத்தில் கூட யோகி ஆதித்யாநாத் பேசும்போது, நாங்கள் புல்டோசர் இயந்திரங்களை வைத்துள்ளோம். புல்டோசர்களை பயன்படுத்தி கட்டிடங்களை கட்டலாம், அதேசமயம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோரின் கரங்களை ஒடுக்கலாம் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications