Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 ஆண்டுகளில் முதல்முறை: முஸ்லிம் அமைச்சர் இல்லாத இந்திய அமைச்சரவை

Subscribe to Oneindia Tamil
முக்தார் அப்பாஸ் நக்வி
Getty Images
முக்தார் அப்பாஸ் நக்வி

பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இருந்து கடைசி முஸ்லிம் அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி பதவி விலகிய பிறகு, 75 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக, முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத இந்திய அரசு உருவாகியுள்ளது.

இந்தியாவின் சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதன்கிழமை (ஜூலை 6) பதவி விலகினார்.

இந்தியாவில் முஸ்லிம்களின் தொகை சுமார் 20 கோடி ஆகும். இது இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகையாகும். ஆனால், தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியான பாஜக கூட்டணிக்கு சுமார் 400 உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்லை.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை பாஜக எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் முக்தார் அப்பாஸ் நக்வி, அரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அவரது துறை, தொலைக்காட்சி சீரியல் உலகில் இருந்து அரசியலுக்கு வந்த 46 வயதான ஸ்மிருதி இரானிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்தார் அப்பாஸ் நக்வி
Getty Images
முக்தார் அப்பாஸ் நக்வி

பாஜகவின் பார்வையின் விரிவாக்கம்

ஸ்மிருதி இரானி பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் அவர் சிறுபான்மை சமூகமான 'பார்ஸி' வகுப்பைச் சேர்ந்தவரை மணந்துள்ளார்..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து அமேதி தொகுதியில் மக்களவை உறுப்பினரானார் ஸ்மிருதி இரானி.

இந்திய மக்கள்தொகையில் 14 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இந்திய அமைச்சரவையில் இல்லாமல் இருப்பது, இந்திய ஜனநாயகத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

பாஜக தலைமையிலான அரசில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை என்று கொல்கத்தாவில் உள்ள ஆலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முகமது ரியாஸ் கூறினார்.

முஸ்லிம் அமைச்சர் இல்லாத இந்திய அமைச்சரவை
Getty Images
முஸ்லிம் அமைச்சர் இல்லாத இந்திய அமைச்சரவை

"இது அந்தக்கட்சியின் பழைய அணுகுமுறையின் நீட்சி. இந்த அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தபோதிலும், அவர்களால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் சிறப்பு நன்மைகள் ஏற்பட்டதா? முஸ்லிம்களின் முக்கியமான பிரச்னைகளை அவர்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்தில் திறம்பட எழுப்பவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய அரசில் எந்த ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இல்லாததை 'விசித்திரமான சூழ்நிலை' என்று மூத்த வர்ணனையாளர் ஆர்த்தி ஜெரத் விவரிக்கிறார்.

"பாஜக உருவானதில் இருந்தே, கட்சியில் நிச்சயமாக ஒரு மூத்த முஸ்லிம் தலைவர் இருந்து வந்துள்ளார்" என்கிறார் அவர்.

'முஸ்லிம்களுக்கு எதிரான பிம்பம்'

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் பாஜக மூத்த தலைவர்களான சிக்கந்தர் பக்த், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஷாநவாஸ் ஹுசைன் போன்ற மூத்த தலைவர்களை நினைவு கூர்ந்த ஆர்த்தி ஜெரத், "ஷாநவாஸ் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றார். இது ஒரு முஸ்லிம் தலைவருக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்," என்றார்.

அரசில் ஒரு முஸ்லிம் முகம் இருப்பது பெரும்பாலும் வெறும் சம்பிரதாயம் தான் என்றாலும், வேறு பல காரணங்களால் பாஜக விரைவில் ஒரு முஸ்லிம் முகத்தை அரசில் கொண்டு வர முயற்சிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நக்வி, ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்படலாம் அல்லது நாட்டின் குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக கட்சி அவரை அறிவிக்கலாம் என்று ஊடகங்களில் ஊகங்கள் உள்ளன.

முஸ்லிம் அமைச்சர் இல்லாத இந்திய அமைச்சரவை
Getty Images
முஸ்லிம் அமைச்சர் இல்லாத இந்திய அமைச்சரவை

"அரசு ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாஜகவின் முஸ்லிம் எதிர்ப்பு பிம்பம், மேலும் வலுப்பெற்றுவிடும்" என்று ஜெரத் கூறுகிறார்.

"அவர்கள் எப்படியாவது ஒரு முஸ்லிம் தலைவரை முன்னால் கொண்டு வர வேண்டும்."

ஆனால், இந்த சூழ்நிலையில் பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான தனது பிம்பத்தைப் பற்றி கவலைப்படுகிறதா?

"முகமது நபி தொடர்பாக சர்ச்சை எழுந்ததில் இருந்து, சர்வதேச சமூகத்தின் காரணமாக பாஜகவில் சிறிது கவலை நிலவுகிறது. அவர்கள் வாக்காளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியும், சமீப காலங்களில் அக்கட்சி அதை தேர்தல்களிலும் நிரூபித்துள்ளது. ஆனால், நிச்சயமாக சர்வதேச சமூகம் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது," என்று ஆர்த்தி ஜெரத் குறிப்பிட்டார்.

பாஜக பெயரளவுக்காவது விரைவில் சில முஸ்லிம்களின் பெயர்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று பேராசிரியர் ரியாஸ் குறிப்பிட்டார்.

முக்தார் அப்பாஸ் நக்வி
Getty Images
முக்தார் அப்பாஸ் நக்வி

"ஆனால், இது எந்த ஒரு கருத்தியல் மாற்றத்தாலும் நடக்காது. அது ஒரு நடைமுறை அரசியல் நகர்வாக மட்டுமே இருக்கும். இதிலிருந்து முஸ்லிம்கள் தலைமையில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது" என்கிறார் அவர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 7 முஸ்லிம்களுக்கு பாஜக சீட்டு வழங்கியது, ஆனால் அவர்களில் ஒருவராலும் அவர்களது தொகுதியில் வெற்றிபெற முடியவில்லை.

மத அரசியல் மற்றும் வாக்கு வங்கி

இதேபோல், 2019 ஆம் ஆண்டிலும், அக்கட்சி ஆறு முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுத்தது. ஆனால், அவர்களும் வெற்றிபெறத் தவறிவிட்டனர். அதே நேரத்தில் பாஜக கடந்த முறையை விட அதிக பெரும்பான்மையைப் பெற்றது.

மோதி அரசாங்கத்தின் மத அடிப்படையிலான அரசியல் அக்கட்சிக்கு மிகவும் நன்மை பயப்பதாக நிரூபணமாகியுள்ளது. ஆனால், மோதி அரசு பெரும்பாலும் இந்தியாவின் பல கருத்தியல் மற்றும் மத சுதந்திரத்தை, சர்வதேச மட்டத்தில் நாட்டின் சிறந்த பிம்பத்தை உருவாக்க பயன்படுத்துகிறது.

​​"உள்நாட்டை பொருத்தவரை பாஜகவுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், சர்வதேச அளவில் இமேஜ் பிரச்னை உள்ளது. நரேந்திர மோதி தனது இமேஜில் அதிக கவனம் செலுத்துகிறார். வளைகுடா நாடுகள் நமக்கு முக்கியம். ஏனென்றால், நமது பெரும்பாலான எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த நாடுகள் நமது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகள்," என்று ஆர்த்தி ஜெரத் குறிப்பிட்டார்.

https://www.youtube.com/watch?v=_k0zHyTJSaU&t=1s

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+