RRR ஹீரோ பெயரில் புதிய மாவட்டம்... ஆந்திராவின் மேப்பையே மாற்றிய ஜெகன் - 13 புதிய மாவட்டங்கள் உதயம்
அமராவதி : ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக ஏற்கனவே இருந்த மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்கள் இன்று முதல் உதயமாகியுள்ளன.
தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 13 மாவட்டங்கள் இருந்தன. ஏராளமான மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால் இந்த மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்தார்.

ஆந்திராவின் மேப்பையே மாற்றிய ஜெகன் மோகன்
இதனை தொடர்ந்து தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்ற அவர் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், ஆந்திர அரசு காலதாமதம் செய்வதாக பலரும் குற்றம்சாட்டத் தொடங்கினர். இந்த நிலையில் 13 மாவட்டங்களையும் 2 ஆக பிரித்து 26 ஆக அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்க ஜெகன் மோகன் ரெட்டி சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் ஆந்திர அரசு 26 மாவட்டங்களை கொண்ட புதிய மாநில வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் அரசு அறிவித்துள்ளது.

திருப்பதி தலைமையில் தனி மாவட்டம்
ஆந்திர அரசின் அறிவிப்பின்படி சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு திருப்பதியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ பாலாஜி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரியில் இருந்து காக்கினாடா மற்றும் கானசீமா ஆகிய 2 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. குண்டூர் மாவட்டத்திலிருந்து பிரித்து பல்நாடு மற்றும் பாபட்லா ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

RRR பட ஹீரோ பெயரில் தனி மாவட்டம்
விஜயநகரகம் மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு மான்யம் என்ற புதிய மாவட்டமும், விசாகப்பட்டினம் மூன்றாக பிரிக்கப்பட்டு அனகபள்ளி மற்றும் அல்லூரி சிதாராம ராஜு ஆகிய பெயர்களில் புதிய மாவட்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. சுதந்திர போராட்ட வீரரான அல்லூரி சீதாராம ராஜுவின் கதையை தழுவியே ராஜமௌலி RRR திரைப்படத்தை எடுத்தது குறிப்பிடத்தக்கது. கர்னூல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு நந்தியா என்ற பெயரில் புதிய மாவட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

என்.டி.ஆர். பெயரில் புதிய மாவட்டம்
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமா ராவ் பெயரில் புதிய மாவட்டம் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் கடப்பா மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு அன்னமயா என்ற பெயரில் புதிய மாவட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. அனந்தபுரா மாவட்டத்தை இரண்டாக பிரித்துள்ள ஆந்திர அரசு ஸ்ரீ சத்ய சாய் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications