மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது!
வங்கி கணக்குகளில் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் டெபாசிட் தொகைகள், முதிர்வடைந்தும் வாங்கப்படாமல் உள்ள இன்சூரன்ஸ் க்ளைம்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளின் டிவிடெண்ட் தொகை என அனைத்தையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் மிக எளிதாகத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, மத்திய நிதியமைச்சகம் ஒரு புதிய ஒருங்கிணைந்த ஆன்லைன் இணையதளத்தை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய நிதி சந்தையில் சிதறிக்கிடக்கும் பொதுமக்களின் உரிமை கோரப்படாத சொத்துக்களை ஒரே இடத்தில் கண்டறிய இந்தத் தளம் வழிவகை செய்கிறது. ஏற்கனவே வங்கி வைப்பு நிதிக்கான தளம் இருந்த நிலையில் தற்போது மொத்தமாக அனைத்து நிதி சார்ந்த திட்டங்களின் நிதியை ஒருங்கிணைக்கும் தளமாக இது உள்ளது.

இந்த எளிய தொழில்நுட்ப வசதி, 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சாமானிய மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பல குடும்பங்களில் குடும்பத் தலைவர் இறந்த பிறகு, அவர்கள் வங்கிகளிலோ அல்லது இன்சூரன்ஸிலோ சேமித்து வைத்த பணம் குறித்த விபரங்கள் தெரியாமல் தவிக்கும் ஏழை எளிய குடும்பங்கள், இனி இந்த இணையதளம் மூலம் தங்களுக்குச் சேர வேண்டிய சட்டப்பூர்வமான பணத்தை எவ்வித இடைத்தரகர்களின் தொந்தரவும் இன்றிப் பெற்றுப் பயனடையலாம்.
பொதுமக்களுக்குத் தங்களின் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்கள் (Unclaimed Financial Assets) பற்றிய தகவல்கள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய நிதியமைச்சகம் 'பிஎஸ்பி அலையன்ஸ்' (PSB Alliance) என்ற பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்புடன் இணைந்து இந்தத் இணையதளத்தை வடிவமைத்துள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குச் சொந்தமான அல்லது தங்களின் குடும்பத்தார் விட்டுச் சென்ற பணத்தைக் கண்டறிய இனி ஒவ்வொரு வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
இந்தத் பிரத்யேக தளம் மூலம், ஒட்டுமொத்த நிதிச் சந்தையையும் ஒரே குடையின் கீழ் நுகர்வோரால் கண்காணிக்க முடியும். நிதிச் சேவைகள் துறையின் (Department of Financial Services) செயலாளர் எம்.நாகராஜு, பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த புதிய தளத்தை முறைப்படி மக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்துள்ளார்.
பொதுமக்கள் தங்களின் முடங்கிய பணத்தைத் தேடுவதற்கு ஏதுவாக, 'www.unclaimedassetsportal.in' என்ற இணையதள முகவரி தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஒரேயொரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள், காப்பீட்டு நிறுவனங்களில் தேங்கிக் கிடக்கும் இன்சூரன்ஸ் தொகைகள், பங்குச் சந்தையில் உள்ள பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய லாபப் பங்குகள் ஆகியவற்றின் விவரங்களை எளிய மக்கள் தங்களின் மொபைல் அல்லது கணினி மூலமாகவே நொடியில் தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த புதிய கட்டமைப்பு பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, தகவல்களைத் தேடுவதற்கான முறையை எளிதாக்கும் என்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'விக்சித் பாரத் 2047' (Viksit Bharat 2047) என்ற வளர்ந்த இந்தியா இலக்கை எட்டுவதற்கும், நிதி மேலாண்மையில் எளிய மக்களுக்கு அதிகாரம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதற்கும் இது ஒரு முக்கியப் படியாக அமையும் என்று மத்திய அரசு நம்புகிறது.












Click it and Unblock the Notifications