நீங்க சிங்கிளா? பிப்.,14ல் கல்லூரி வராதீங்க.. மாணவிகளுக்கு ‛பாய் ப்ரெண்ட்’ கட்டாயம்.. பரபர நோட்டீஸ்
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள ஒரு கல்லூரியில் 'பாய் பிரெண்ட்' இல்லாமல் இருக்கும் சிங்கிள் மாணவிகள், கல்லூரிக்குள் நுழையக் கூடாது என கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்குள் சிங்கிள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பரையாவது வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் அந்த நோட்டீஸில் எழுதப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த நோட்டீஸை பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த கல்லூரி நோட்டீஸ்தான் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பரபர நோட்டீஸ்
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் இன்று ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதில், "பிப்ரவரி 14-ம் தேதிக்குள் (காதலர் தினம்) அனைத்து மாணவிகளும் குறைந்தபட்சம் ஒரு ஆண் நண்பரையாவது கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும்.

'பாய் பிரெண்ட்' கட்டாயம்
அவ்வாறு, ஆண் நண்பர் இல்லாமல் வரும் சிக்கிள் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவிகள் தங்கள் ஆண் நண்பருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்ட வேண்டும். இது முழுக்க முழுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அன்பை பரப்புங்கள்" என அந்த நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த முதல்வர்
இந்த நோட்டீஸை பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முதல்வர் ஏன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என அவர்கள் குழம்பி போயினர். பின்னர் இதுதொடர்பாக தங்கள் பேராசிரியர்களிடம் மாணவர்கள் தெரிவிக்க, இந்த விவகாரம் கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, அடித்து புரண்டு ஓடி வந்த கல்லூரி முதல்வர், அந்த நோட்டீஸை கிழித்தெறிந்தார். மேலும், இந்த நோட்டீஸை தான் ஒட்டவில்லை என்றும் கூறிய அவர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

"மோசடி நோட்டீஸ்"
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது கையெழுத்தை ஸ்கேன் செய்து இந்த மோசடி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது மிக மோசமான விதிமீறல். கல்லூரியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இந்த நோட்டீஸை சில விஷமிகள் ஒட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளேன். போலீஸ் விசாரணையில், தவறிழைத்த மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications