11 குழந்தைகள் போதாதாம்! குடும்ப கட்டுப்பாடு செய்த மனைவியை வீட்டைவிட்டே துரத்தியவர்! நம் நாட்டில்தான்
11 ஆண்டுகளாக இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து கர்ப்பம் தரித்து குழந்தைகளைப் பெற்றதால் ஜானகி உடலில் போதிய ரத்தமும், ஊட்டச்சத்தும் இல்லாமல் இருந்திருக்கிறது.
புவனேஸ்வர்: தனக்குத் தெரியாமல் தனது மனைவி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கணவன், அவரையும், 11 குழந்தைகளையும் வீட்டைவிட்டுத் துரத்திய கொடூர சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பிறந்து 20 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 11 குழந்தைகளுடன் தெருவில் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவரது கணவர் இந்த செயலை செய்துள்ளதாகத் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

12 ஆண்டுகளில் 11 குழந்தை
ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரபி தெஹுரி (40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானகி (30) என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 5 ஆண், 5 பெண் என 10 குழந்தைகள் இருந்த நிலையில், ஜானகி கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து, அங்குள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

உடல்நிலை மோசம்
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததைக் கண்டறிந்தனர். 11 ஆண்டுகளாக இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து கர்ப்பம் தரித்து குழந்தைகளைப் பெற்றதால் ஜானகி உடலில் போதிய ரத்தமும், ஊட்டச்சத்தும் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்த சூழலில், மீண்டும் கர்ப்பம் ஆனால் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்தனர். எனவே, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளுமாறு அவரை வலியுறுத்தினர். ஆனால் ஜானகியோ, தங்கள் குல வழக்கப்படி இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள கூடாது எனக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.

குடும்பக் கட்டுப்பாட்டால் ஆத்திரம்
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஆஷா அமைப்பைச் சேர்ந்த சுகாதார அலுவலரான லட்சுமி சாஹு என்பவர் ஜானகியிடம் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி வந்தார். இதில் ஒருவழியாக ஜானகியும் சம்மதித்தால் அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே, இந்த தகவல் தெரியவந்ததும் ஜானகியின் கணவர் ரபி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். எனக்குத் தெரியாமல் எப்படி குடும்ப கட்டுப்பாடு செய்தாய் எனக் கேட்டு ஜானகியையும், 11 குழந்தைகளையும் வீட்டில் இருந்து துரத்திவிட்டார் ரபி.

துரத்திவிட்ட கணவன்
இதனால் வேறு வழியில்லாமல் 10 நாட்களுக்கும் மேலாக ஒரு சாலையோர மரத்துக்கு அடியில் ஜானகி தனது குழந்தைகளுடன் தங்கியிருக்கிறார். பிறந்து 20 நாட்கள் கூட ஆகாத பச்சிளம் குழந்தையும் வெயிலும், குளிரிலும் கஷ்டப்பட்டு வருகிறது. இதனைக் கேள்விப்பட்ட ஆஷா சுகாதார அலுவலர் லட்சுமியும், இன்ன பிற சமூக ஆர்வலர்களும் ஜானகியின் கணவன் ரபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவரோ குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டதால் அவள் பெண் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார்.. இனி அவரால் எந்தக் கடவுளுக்கும் பூஜை செய்ய முடியாது. எனவே ஜானகியை இனி சேர்த்துக்கொள்ள மாட்டேன் என ரபி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஜானகியை அரசு விடுதியில் சேர்த்துள்ள சமூக ஆர்வலர்கள், அவரது கணவர் ரபி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications