கோரமண்டல் ரயில் விபத்து.. ரத்தம் கொடுக்க மருத்துவமனைக்கு ஓடி வந்த உள்ளூர் மக்கள்.. ஒரே கூட்டம்
புவனேஸ்வர்: ஓடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரயில் பயணிகளின் உயிரை காக்கவும் தேவைப்படுவோருக்கு ரத்த தானம் தருவதற்காகவும் உள்ளூர் மக்கள் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போலக் கிளம்பியது. இந்த ரயிலின் எண் 12841 ஆகும். இந்த ரயில் மறுநாள் மாலை ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும். கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய இந்த ரயில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பாலசோர் மாவட்டத்தில் வரும் போது தான் விபத்தில் சிக்கியுள்ளது.

பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் அந்த வழியாக வந்த சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டது. அதே நேரத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலும் அதே இடத்தில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கியது.மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறியுள்ளன. ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள பயணிகள் பலரும் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூரில் வசிக்கும் மக்கள் பலரும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். தேவைப்படுவோருக்கு ரத்த தானம் அளிப்பதற்காகவும் ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நீடித்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்று மீட்புப்படையுடன் தீவிரமாகமாக ஈடுபட்டுள்ளனர். நிகழ்ந்த விபத்து கொடூரமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று விபத்தில் சிக்கியவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications