ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்- அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா அதிபர் புதின் கடும் கண்டனம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாகவும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேபோல ரஷ்யா அதிபர் புதினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். மேலும்12 பேர் படுகாயமடைந்தனர். இந்த 12 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த கோரப் படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது எக்ஸ் பக்கத்தில், இந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் அமெரிக்காவின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல ரஷ்யா அதிபர் புதினும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் பல நாட்டு தலைவர்கள் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications