ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த விமானி தமிழகத்தை சேர்ந்தவர்.. வெளியான உருக்கமான தகவல்கள்!
அருணாசால பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு பைலட்டுகள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் தேனி பெரியகுளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இடா நகர்: அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருத 2 பைலட்டுகளும் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த 2 பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது.
ராணுவ வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளின் பயணங்கள், தீவிர ரோந்து பணிகள், மீட்புப் பணிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

ராணுவ ஹெலிகாப்டர்
குறிப்பாக மலை பிரதேசங்களில் சாலைப் பயணங்கள் மிகவும் சவால் மிக்கது என்பதோடு கூடுதல் நேரம் ஆகும் என்பதால் இதை தவிர்க்க சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் பயணம் செல்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் சீன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டர் நேற்று காலை 9:15 மணியளவில் புறப்பட்டது.

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது
இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்ற மீட்புப் படையினர், காலை முதல் பல மணி நேரங்களாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

2 பைலட்டுகளும் பலி
ஹெலிகாப்டரில் சென்ற 2 ராணுவ விமானிகளின் நிலை குறித்து தெரியாமலேயே இருந்தது. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹெலிகாப்டரின் சேத பாகங்கள் மண்டலாவின் கிழக்கு கிராமமான பங்களாஜாப் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு பைலட்டுகளுமே பலியானது தெரியவந்தது. உயிரிழந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்.

தேனி பெரியகுளத்தை சேர்ந்தவர்
லெப்டினண்ட் வி.வி.பி ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெய்ந்த் என்று அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்த் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயந்த் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை மூழ்க வைத்துள்ளது.

உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது
ஜெயமங்கலம் கிராமத்தின் வ.உ.சி தெருவில் வசித்து வரும் ஆறுமுகம் பிள்ளை - மல்லிகா என்பவருடைய மகன் ஜெய்ந்த் ஆவார். 37-வயதான ஜெயந்திற்கு ஸ்டெல்லா என்ற மனைவி உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. இவருக்கு குழந்தை இல்லை. ஜெயந்த் ராணுவத்திற்கு போனதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கிராம மக்கள் சோகத்துடன் கூறி வருகின்றனர். ஜெயந்தின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications