99 வயதான மோடியின் தாய்.. திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி - குஜராத் வரும் பிரதமர்
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவை தொடர்ந்து அவர் அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி அஹமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அஹமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இதயவியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை விளக்கம்
அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹீராபென் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்து உள்ளனர். இதனை கடந்து அவருக்கு என்ன பிரச்சனை என்பது தொடர்பான தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் தன்னுடைய 99 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிரதமர் மோடியின் தாய் பாசம்
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய தாயை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். அதேபோல் தன்னுடைய தாயை பற்றி உணர்ச்சிகரமாக மதர் என்ற பெயரில் பிளாகையும் அவர் எழுதி இருக்கிறார். அதேபோல் அடிக்கடி தன்னுடைய தாயாரை பற்றி பொது நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.

அடிக்கடி தாயுடன் சந்திப்பு
டெல்லியில் இருந்தாலும் அடிக்கடி குஜராத்துக்கு செல்லும் அவர், தன்னுடைய தாயாரை சந்திப்பது வழக்கும். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலின்போதும் தனது தாயாரின் வீட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

பாஜக எம்.எல்.ஏக்கள்
99 வயதானாலும் திடகாத்திரமாக இருக்கும் ஹீராபென் மோடி தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வருபவர். பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ஷனாபென் வகேலா மற்றும் கவுசிக் ஜெயின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்கள்.

அஹமதாபாத் செல்லும் மோடி
இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தாயாரை பார்ப்பதற்காக அஹமதாபாத்திற்கு செல்ல உள்ளார். விமானம் மூலமான விரைவில் அவர் அஹமதாபாத் சென்று மருத்துவமனையில் தாய் ஹீராபென் மோடியை சந்திக்க இருக்கிறார். இதனால் குஜராத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications