இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாகும் குஜராத்தின் மோதேரா.. அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
காந்திநகர்: இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இவ்வாறு இருக்கையில், குஜராத்தில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

கோயில் நகரம்
இன்று முதல் வரும் 11ம் தேதி வரை குஜராத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில்தான் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் அறிவிக்கிறார். இந்த பயணத்தின்போது மோடி, இன்று மெஹ்சானாவில் உள்ள மோதேராவில் ஒரு முக்கிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதாவது, முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் கிராமமாக மோதேராவை மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்தியாவின் சூரிய கோயில் நகரம் என்று மோதேரா அழைக்கப்படுகிறது.

முதல் கிராமம்
எனவே சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தும் கிராமமாக இதனை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் முழுக்க முழுக்க சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் கிராமமாக மோதேரா பெயரெடுக்கும். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஒரு சூரிய மின் நிலையமும், 1,300க்கும் அதிகமான சூரிய தகடுகளும் கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் (BESS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மின் கட்டணம்
இவ்வாறு சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தை முழுமையாக குறைக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக ரூ.1,000 வரை மின் கட்டணம் இருந்ததாகவும் தற்போது இது கணிசமாக குறைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதேபோல மின்தகடு பொருத்த சாத்தியமுள்ள அனைத்து வீடுகளிலும் இது பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் சுமார் 6,373 மக்கள் வசித்து வந்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மாற்று சக்தி
இந்த திட்டத்தைத் தொடர்ந்து பருச், அகமதாபாத் மற்றும் ஜாம்நகரில் உள்ள அமோத் ஆகிய பகுதிகளில் நாளை பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயிலுக்குச் செல்கிறார்.
வெப்பமயமாதல் பிரச்னை உலகம் முழுவதும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில் சர்வதேச நாடுகள் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருளுக்கு மாற்றாக சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட இயற்கை ஆற்றலை பயன்படுத்த தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications