For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகுராம் ராஜன்... 'பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி!'

By Shankar
Google Oneindia Tamil News

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் இப்போதைய நிலையைப் பார்த்தால், ரஜினிகாந்தின் இந்த சிவாஜி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

அதிகாரிகளை வைத்து அரசியல் செய்வதில் காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி.. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

ஆனாலும் இந்த விஷயத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பரவாயில்லை எனலாம். திறமையானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கட்சி சாயம் பூச முற்படாமல், கைகொடுத்து முக்கிய பதவியைக் கொடுத்தார்கள்.

Raghuram Rajam's exit: Is it a political ploy?

ஏன் மன் மோகன் சிங்கே காங்கிரஸ் அரசியல்வாதி அல்லவே. அவர் ஒரு பொருளாதார அறிஞர்... அதிகாரி. அவரது பொருளாதார அறிவு நாட்டுக்குத் தேவைப்பட்டதால் நிதி அமைச்சரானார் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்.

அப்படித்தான் ரகுராம் ராஜனும். அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவரை, பன்னாட்டு நிதி அமைப்பின் தலைமை பொருளாதார அறிஞராக இருந்தவரை மன்மோகன் சிங்தான் இந்தியாவுக்கு திரும்ப அழைத்தார்.

காரணம்.. ரகுராம் ராஜனின் அசாத்திய திறமை. ஐஎம்எஃப் எனும் பன்னாட்டு நிதியத்தின் மிக இளம் பொருளாதார அறிஞரான ராஜன், 2005லேயே அமெரிக்காவின் வீழ்ச்சியைக் கணித்தவர். அதற்காக முதலில் அமெரிக்க அரசால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் 2008-ல் அவர் சொன்னது அனைத்தும் நிஜமானது அமெரிக்காவில். அமெரிக்கப் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

பின்னர் 'இன்சைட் ஜாப்' என்ற டாகுமென்டரிக்காக ரகுராம் ராஜன் அளித்த நீண்ட பேட்டி, அந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தர உதவியது!

இப்படி ஒரு திறமையாளர்தான் நாட்டுக்குத் தேவை என மன்மோகன் சிங் விரும்பியதால், சிகாகோ பல்கலைக் கழகத்தில் தான் வகித்து வந்த பேராசிரியர் பணிக்கு நீண்ட விடுப்பு கொடுத்துவிட்டு தாயகம் வந்தார்.

2007-ல் இந்திய நிதித்துறை சீர்திருத்தத் துறைத் தலைவராக பொறுப்பேற்றவர், அடுத்த ஆண்டே, இந்திய பொருளாதாரத் துறையின் ஆலோசகராகப் பதவி ஏற்றார். 2012-ல் இந்திய நிதித் துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட ராஜன், 2013-ல் இந்திய ரிசர்வ் வங்கித் தலைவரானார்.

ராஜன் இந்தியாவுக்கு வந்த நேரம் நாடு பணவீக்கம், விலைவாசி, வராக்கடன் சுமை என பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக வங்கிகளின் நேர்மையற்ற நிர்வாகத்தை வெளிப்படையாகக் கண்டித்தவர் ராஜன்.

பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் வெளிச்சந்தை நடவடிக்கைகளை, உண்மையான வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்த வேண்டும் என விரும்பினார் ராஜன்.

உதாரணம் வங்கி விகிதம், ரெபோ விகிதம் போன்றவை. ரகுராம் ராஜன் ரிசர்வ்வங்கித் தலைமைப் பதவிக்கு வந்த பின் வட்டி விகிதம், வங்கி விதம் குறைக்கப்படும் போதெல்லாம், இதன் பலனை ஏன் பொதுமக்களுக்கு வங்கிகள் தருவதில்லை எனக் கேள்வி எழுப்பினார். ரெபோ விகிதம் குறைக்கப்பட்டால், அடுத்த நாளிலிருந்தே அதன் பலனை வங்கிகள் மக்களுக்குத் தரவேண்டும். அப்போதுதான் நாட்டில் பணவீக்கம், பணப் புழக்கம் சீர்ப்படும் என்பதை அழுத்தமாகச் சொல்லி வந்தார்.

ஒரு கட்டத்தில் சலித்துப் போய், 'வங்கிகள் தனியார் வர்த்தக மையங்கள் அல்ல. லாபத்தை மட்டுமே குறிவைத்து இயங்கக் கூடாது. மக்களின் பணம் புழங்கும் இடம். மக்களுக்கான பலன்களை உடனுக்குடன் தர வேண்டும். வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி தளர்த்தும்போது, ஏன் உடனடியாக வங்கிகளும் குறைப்பதில்லை. அதிலும் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியது பல வங்கிகளின் தலைமைக்குப் பிடிக்காமல் போனது.

'முதலாளித்துவம்தான் சிறந்த பொருளாதார அமைப்பு. அந்தப் போட்டியும் செயல்பாடும்தான் ஆரோக்கியமான வாழ்க்கையை மக்களுக்குத் தரும்.. நல்ல, போட்டி மிக்க பணச்சந்தைதான் வறுமை ஒழிப்புக்கான முக்கிய கருவி, என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், தனியார் நிறுவனங்களிடம் கறாராகவே நடந்து கொண்டார் ராஜன். வங்கிகளில் வராக் கடன் வைத்திருந்த நிறுவனங்களுக்கு இவர் பெரிய தலைவலியாகத் திகழ்ந்தார்.

இன்று மல்லையா வெளிநாட்டில் பதுங்கிக் கொண்டிருந்தாலும், இங்கே இந்த அளவு நாறிப் போக முக்கிய காரணம் ரகுராம் ராஜன்தான்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பணவீக்கக் கணிப்பு முறையையே மாற்றி அமைத்தவர் ராஜன். முன்பெல்லாம் பணவீக்கம் என்பது ஜோசியம் மாதிரிதான் சொல்லப்படும். இன்று ஓரளவு துல்லியமாக அதைக் கணிக்க முடிகிறது. அடுத்து வரும் நாட்களில் முன்னெச்சரிக்கையாக அதைக் கட்டுப்படுத்தும் பொருளாதாரக் கருவிகளை பயன்படுத்தவும் முடிகிறது.

ஆனால் அடிப்படைவாதிகளுக்குக் கட்டுப்படாததாலேயே இவரை காங்கிரஸுன் கைக்கூலி என்று சுலபமாக குற்றம்சாட்டிவிட்டனர் பாஜகவினர். அதில் தனக்கும் உடன்பாடுதான் என்ற ரீதியில் மவுனம் காத்து, ராஜனின் பதவி நீட்டிப்பை அறிவிக்காமல் விட்டது பாஜக அரசு.

விளைவு, உடனடியாக அவர் தனது சிகாகோ பல்கலைக் கழக நிதித் துறை பேராசிரியர் பணியைத் தொடரப் போவதாக அறிவித்துவிட்டார். சர்வதேச அளவில் பலரும் ராஜனின் இந்த முடிவுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தியா ஒரு சிறந்த பொருளாதார அறிவை இழந்து தவிக்கப் போகிறது என எச்சரித்துள்ளனர்.

ராஜனின் முடிவைக் கேள்விப்பட்டு, 'ரிசர்வ் வங்கி என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பா அல்லது மத்திய அரசின் விருப்பத்துக்கேற்ப ஆடும் துறையா?' என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கேள்வி எழுப்பியிருந்தார்.

பதவியிலிருந்த மூன்றாண்டு காலத்தில், இரண்டாண்டுகள் சுப்பிரமணியம் சுவாமி மாதிரியான தீவிர வலதுசாரிகளுடன் போராடியபடி பொருளாதாரத்தையும் நிதித்துறையையும் சமநிலைப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. அதைச் செய்ய முயற்சித்த ரகுராம் ராஜனுக்கு மோடி அரசு தந்திருக்கிற பதவி உயர்வு... அவரை மீண்டும் அமெரிக்காவுக்கே அனுப்புவது!

English summary
Is Raghram Rajan's exit from Reserve Bank and return to US is a political ploy? Here is the detailed story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X