காங்கிரஸுக்கு பெரிய சிக்கல்.. இன்று அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகும் கெலாட் மகன்! பின்னணி என்ன
ஜெயப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் அந்நிய செலாவணி விசாரணைக்கு இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜாராக இருக்கிறார்.
இன்னும் சில வாரங்களில் ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் எல்லா மாநிலங்களிலும் சூடு பிடித்துள்ளது.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருக்கும் நிலையில், அங்கே வரும் நவ.25ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அங்கு இந்த முறை இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கிறது. ஒரு பக்கம் எப்படியாவது காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. மற்றொரு பக்கம் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதனால் ராஜஸ்தானில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரம் அங்கே மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்றைய தினம் ராஜஸ்தானில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தன.
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ராவிற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையினர் கோவிந்த் சிங் தோதஸ்ராவிற்கு சொந்தமான ஜெய்ப்பூர் மற்றும் ஷிகர் நகரில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.
இது ஒரு பக்கம் இருக்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் விசாரணைக்காக ஜெய்ப்பூரில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துரை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி இன்று அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்குள்ள ட்ரைடன் ஹோட்டல் & ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களில் சமீபத்தில் தான் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், வைபவ் கெலாட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த வழக்கு விசாரணை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications