"கொடூரத்தின் உச்சம்.." அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்
ஜெய்ப்பூர்: அரசு வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தம்பதியர் தாங்கள் பெற்ற குழந்தையையே கொலை செய்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜன்வர்லால் (35). இவருக்கும், ப்ரீத்தி சென் (30) என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஜன்வர்லால் தினமும் கொண்டு வரும் சொற்ப பணத்தை வைத்தே அவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வந்தனர்.

அரசுப் பணி மோகம்
இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஜன்வர்லால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சி வந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பல அரசு உயரதிகாரிகளை அவ்வப்போது சென்று பார்ப்பதும், அவர்கள் மூலமாக அரசு பணிக்கு முயற்சி செய்வதுமாக இருந்து வந்துள்ளார் ஜன்வர்லால்.

ரூ.3 லட்சம் புரட்டிக் கொடுத்து..
இந்நிலையில், அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளர் (ப்யூன்) பணி காலியாக இருப்பதாகவும், ரூ.3 லட்சம் கொடுத்தால் அதை வாங்கி கொடுப்பதாகவும் ஜன்வர்லாலிடம் அவருக்குத் தெரிந்த அரசு உயரதிகாரி கூறினார். இதையடுத்து, தனது மனைவியின் நகைகள், தங்களுக்குச் சொந்தமாக இருந்த சிறிய நிலம் ஆகியவற்றை விற்று ரூ. 3 லட்சத்தைப் புரட்டி எடுத்து அவருக்கு கொடுத்தார் ஜன்வர்லால். இதையடுத்து, கடந்த மாதம் ஜன்வர்லாலுக்கு அந்தப் பணி கிடைத்தது.

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..
ராஜஸ்தானில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்களுக்கு அரசுப் பணி கிடையாது என்ற விதிமுறை இருப்பதால், தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்கின்றன எனப் பொய் கூறி ஜன்வர்லால் வேலைக்குச் சேர்ந்தார். இதனிடையே, அவரது பள்ளியில் உடன் பணியாற்றுபவர்கள் அவரது வீடு இருக்கும் பகுதியை சுற்றியே இருந்துள்ளனர். இதனால் என்றாவது ஒரு நாள் தனக்கு 3 குழந்தைகள் இருப்பது வெளியே தெரிந்து, அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சம் ஜன்வர்லாலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இதுகுறித்து தனது மனைவி ப்ரீத்தியிடம் ஜன்வர்லால் கூற, அவருக்கு வேலை போய்விடும் எனப் பயந்திருக்கிறார்.

வாய்க்காலில் தூக்கி வீசிய கொடூரம்
எனவே மூன்றாவது குழந்தையைக் கொன்றுவிடும் முடிவுக்குக் கணவனும், மனைவியும் வந்துள்ளனர். அதன்படி, சத்தர்கர் பகுதியில் உள்ள கால்வாயில் இரு தினங்களுக்கு முன்பு தங்கள் 5 மாத பச்சிளம் குழந்தையை அவர்கள் வீசியுள்ளனர். பின்னர் ஒன்றும் நடக்காதது போல அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். இந்நிலையில், அந்த வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர், குழந்தையை இருவர் வீசி செல்வதைப் பார்த்து போலீஸில் தெரிவித்துள்ளார். இதன்பேரில், வாய்க்காலில் தீயணைப்பு வீரர்களுடன் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், ஜன்வர்லாலையும், அவரது மனைவி ப்ரீத்தி சென்னையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications