For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜிவ் வழக்கு: தூக்கு அபாயத்தில் இருந்து மீண்டனர் 3 தமிழர்கள்! மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் 3 தமிழரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது சரியானதே என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 1998ஆம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த உச்சநீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

Rajiv Cae: SC rejects Centre's plea against relief to 3 Tamils

எஞ்சிய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களின் கருணை மனுக்கள் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் 2000ஆம் ஆண்டு சோனியா காந்தி வேண்டுகோளை ஏற்று நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனையை குறைக்க கோரி கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த கருணை மனுவை 11 ஆண்டுகாலம் கழித்து, ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.

இதனையடுத்து 3 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி மூவரின் தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து மூவரது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 21-ந் தேதி உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்தது. கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் ஜனாதிபதியால் கிடப்பில் போடப்பட்டதை காரணம் காட்டி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியன்று பேரறிவாளவன் உட்பட 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் "இந்த மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம்" என்று உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் பேரறிவாளவன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் மூலமாக அறிவித்தார்.

ஆனால் தமிழக அரசின் இந்த முடிவுக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கும் தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த மனு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என்ற மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்தது.

பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை 15-ந் தேதி தொடங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென மத்திய அரசு மீண்டும் ஒரு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் ராஜிவ் வழக்கில் 3 தமிழரின் தூக்கு ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை திருத்தம் செய்யக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று கூறி தூக்கு தண்டனையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போதைய நிலையில் ராஜிவ் வழக்கில் பேரறிவாளவன் உட்பட 3 தமிழருக்கும் தூக்கு தண்டனை என்பது இல்லை; ஆயுள் தண்டனைக் கைதிகள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்ற வழக்கின் தீர்ப்பு மட்டுமே நிலுவையில் இருக்கிறது.

English summary
The Supreme Court Wednesday dismissed a central government plea seeking recall of the court's verdict by which it had commuted the death sentence of three convicts in the Rajiv Gandhi assassination case to life imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X