
நான் ராவணனா? கார்கேவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.. ஒரேபோடு.. அனல் பறந்த குஜராத் பிரசாரம்
காந்திநகர்: குஜராத் தேர்தல் பிரசாரத்தில் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராவணன் என விமர்சனம் செய்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்றைய குஜராத் பிரசாரத்தில் சரமாரியாக பதிலடி கொடுத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை அவர் வார்த்தைகளால் விளாசினார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
2ம் கட்டமாக 93 சட்டசபை தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
குஜராத் தேர்தல்.. போன முறையை விட இந்த முறை கொஞ்சம் மந்தம்தான்.. இதுவரை பதிவான வாக்கு விவரம்

கார்கே விமர்சனம்
இந்நிலையில் குஜராத்தில் தற்போது பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. இழந்த செல்வாக்கை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியும், புதிதாக ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சியும் முயன்று வருகிறது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடி, பாஜகவை விமர்சனம் செய்து பேசினார்.

ராவணன் போல் 100 தலையா?
அப்போது, ‛‛வேறு யாரையும் பார்க்க வேண்டாம். மோடியை மட்டும் பார்த்து ஓட்டுப்போடுங்கள் என கூறுகிறார். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது? உங்களுக்கு எத்தனை அவதாரம்? ராவணன் மாதிரி உங்களுக்கு 100 தலையா இருக்கு?'' என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் மோடி பதிலடி
இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கேவின் ராவணன் கமெண்ட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலடி கொடுத்துள்ளார். குஜராத்தின் கலோலில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛நான் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். குஜராத் ராம பக்தர்களின் பூமி என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது. இந்த பூமியில் நின்று கொண்டு தான் மல்லிகார்ஜூன கார்கே என்னை ராவணன் என பேசியுள்ளார்.
ராமபக்தர்களின் நாட்டில் ஒருவரை ‛ராவணன்' என்று அழைப்பது சரியல்ல.

ராமரை நம்பாத காங்கிரஸ்
ராமர் இருப்பதாக ஒருபோதும் நம்பாதவர்கள் தான் காங்கிரஸ். ராமர் கோவில், ராமர் பாலத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் இப்போது ராமாயணத்திலிருந்து ராவணனை கொண்டு வந்துள்ளனர். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் மனம் திருந்துவது இல்லை. மன்னிப்பு கேட்கவும் மறந்துவிட்டார்.

வாய்ப்பு கிடைத்தால்..
காங்கிரஸ் கட்சியினர் இடையே பிரதமர் மோடியை தாக்கி பேசுவதில் போட்டி உள்ளது. சில நாட்களுக்கு முன் ஒரு காங்கிரஸ் தலைவர் நாய் போன்று நான் இறப்பேன் என்றார். மற்றொருவர் ஹிட்லர் போல் மரணமடைவேன் என்கிறார். மற்றொருவரோ எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மோடியை கொன்று விடுவேன் என கூறுகிறார். இன்னொருவர் ராவணன், அரக்கன், கரப்பான் பூச்சி என கூறுகிறார். காங்கிரஸ் கட்சியினர் ஒரு குடும்பத்தினரை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

காங்கிரஸில் வருத்தம் இல்லை
இதுபோன்ற வார்த்தைகளை யார் பயன்படுது்தினாலும் கண்டிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதனை செய்யவில்லை. இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் வருத்தமும் இல்லை. மோடியை அவமதிப்பது என்பது அவர்களின் உரிமையாக நினைக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் என்னை அவதூறாக பேசியது ஆச்சரியம் அளிக்கவில்லை '' என விமர்சனம் செய்தார்.