For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்?

By BBC News தமிழ்
|

குடியரசு தினத்திற்கு முன்தினமான ஜனவரி 25ஆம் தேதி பட்னாவில் உள்ள 'பிக்னா பஹாடி' பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து இரண்டாவது நாளாக மோதல் ஏற்பட்டது.

மாணவர்கள் மீது போலீசார் கொடூரமாக தடியடி நடத்திய நிலையில், மாணவர்களும் பதிலடியாக கற்களை வீசினர். மாணவர்களின் இந்த பதிலடி தாக்குதலில் பல போலீசார் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஆறு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bihar

ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக பிகாரின் பிற மாவட்டங்களில் இருந்தும் செய்திகளும் படங்களும் வந்துள்ளன. ஆராவில் ரயில் பெட்டிகள் எரிக்கப்படும் படங்கள் வந்துள்ள நிலையில், 'டைனமிக் டெம்பிங் எக்ஸ்பிரஸ் இயந்திரத்தை' போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்த படங்கள் நவாடாவில் இருந்து கிடைத்துள்ளன. பிகாரில் இருந்து அண்டை மாநிலமான உத்தர பிரதேசம் வரை இந்த ஆர்ப்பாட்டம் பரவியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் உட்பட பல இடங்களில் ரயிலை நிறுத்த முயன்ற மாணவர்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கையின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் நான் டெக்கனிக்கல் பாப்புலர் கேட்டகரீஸ் (என்.டி.பி.சி) பிரிவில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதில் குளறுபடி மற்றும் அலட்சியம் ஏற்பட்டதாகக்கூறி பிகார் மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் கடுமையாகி வருகிறது. மாணவர்களின் ஆர்பாட்டத்தின் தீவிரம் குறையாமல் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் பல இடங்களில் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல ரயில்களின் வழித்தடத்தை மாற்ற வேண்டியிருந்தது. திங்களன்று, மாணவர்கள் பட்னாவில் உள்ள 'ராஜேந்திர நகர் டெர்மினலில்' மணிக்கணக்கில் ரயில்களின் இயக்கத்தை நிறுத்திவிட்டனர்.

இந்த வன்முறை எதிர்ப்புகளுக்குப் பிறகு ரயில்வே, நடந்து முடிந்த என்.டி.பி.சி மற்றும் லெவன் ஒன் தேர்வுகளை ரத்து செய்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் புகார் குறித்து விசாரிக்க ஒரு குழுவையும் ரயில்வே அமைத்துள்ளது.

மாணவர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் என்டிபிசி-யின் 35,308 பணியிடங்களுக்கும், குரூப் டி-க்கு சுமார் ஒரு லட்சத்து மூவாயிரம் பணியிடங்களுக்கும் ரயில்வே விண்ணப்பங்களை கோரியது.

பிப்ரவரி-மார்ச் மாதங்களில், மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஏப்ரல்-மே மாதத்தில் புதிய அரசு அமைக்கப்பட்டது. தேர்வு ஜூலை மாதத்திற்குள் நடக்கும் என்று தற்காலிக தேதி வழங்கப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை.

பட்னாவின் பிக்னா பஹாடி வளைவில் போராட்டம் நடத்திய ஆயிரக் கணக்கான மாணவர்களில் அமர்ஜீத்தும் ஒருவர். ​​"தேர்வு 2021இல் நடத்தப்பட்டது மற்றும் CBT-1 (என்.டி.பி.சி) முடிவு 2022 இல் வெளியிடப்பட்டது,"என்று மாணவர்களின் தரப்பை எடுத்துக்கூறிய அமர்ஜீத் தெரிவித்தார்.

அப்போது ரயில்வே வாரியம், CBT-1 (என்.டி.பி.சி) தேர்வில் தேவையைவிட 20 மடங்கு அதிகம் பேர் தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கையில் எழுதியிருந்தது. ஆனால் இப்போது ஐந்து வெவ்வேறு பணியிடங்களுக்கு ஒரே மாணவரைத் தேர்வு செய்துள்ளனர், என்றார்.

https://twitter.com/TejYadav14/status/1486207083532132354

என்டிபிசி வெளியிட்ட முடிவுகளில் ஐந்து லெவல் (நிலைகள்) உருவாக்கப்பட்டுள்ளன என்று மற்றொரு மாணவர் கூறினார். சிலர் ஐந்து நிலைகளிலும், சிலர் நான்கிலும், சிலர் மூன்றிலும் தேர்வாகியுள்ளனர். வேறு சிலர் நல்ல மதிப்பெண்கள் இருந்தாலும்கூட ஒன்றில் கூட தேர்வாகவில்லை.

'ஒரு மாணவர்-ஒரு ரிசல்ட்'-ஐ ரயில்வே வெளியிட வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த முறை தேர்வு, ஒற்றை தேர்வாக இருந்தது. அப்போது மெயின் தேர்வில் சீட் பிரிப்பு நடந்தது. ஆனால் இம்முறை முதல்கட்ட தேர்விலேயே சீட் பிரித்து நல்ல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

ரயில்வே இவ்வாறு செய்வதால் தேர்வெழுதும் மாணவர்கள், சரக்கு காவலர், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற பணிகளுக்கு தகுதி பெற முடியாத நிலை உள்ளது என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

https://twitter.com/TejYadav14/status/1486009054191550471

பிக்னா பஹாடியில் போராட்டம் நடத்தும் மற்றொரு மாணவரான அமித், "இண்டர்மீடியட் (மேல்நிலை பள்ளிக் கல்வி) மாணவர்களுடன் பட்டதாரிகளையும் ஒன்றாகத் தேர்வெழுத வைத்தது அவர்கள் செய்த முதல் தவறு. இதை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனால் தேர்வு முடிவு வந்தபோது கட் ஆஃப் தனித்தனியாக அளிக்கப்பட்டது. ஆனால் அனைவரின் ரிஸல்ட்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று முதல் அறிவிப்பில் எழுதப்பட்டிருந்தது," என்று குறிப்பிட்டார்.

ரயில்வே ஒரு மாணவரை நான்கைந்து பதவிகளில் திரும்பத் திரும்ப போட்டுள்ளதாக அதாவது அவர்களின் பெயர்கள் எல்லா பதவிகளிலும் போடப்பட்டுள்ளன என்று அமித் கூறுகிறார். "ஒரு மாணவர் ஐந்து இடங்களில் தேர்வாகி, அந்த மாணவர் மெயின்ஸுடன் கூடவே திறன் மற்றும் மருத்துவ சோதனையிலும் தேர்ச்சி பெற்றால், அந்த மாணவருக்கு என்ன ஆகும். அவருக்கு ரயில்வே எங்கே வேலை கொடுக்கும்," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த மாணவர் பத்து இடங்களில் தகுதி பெற்றுள்ளார். ஆனால் நீங்கள் அவருக்கு ஒரே ஒரு வேலையைக் கொடுத்தால், ஒன்பது இடங்கள் காலியாக இருக்கும், இல்லையா? என்று அவர் வினவினார்.

https://twitter.com/RailMinIndia/status/1485953219566383105

போராட்டக்காரர்களுக்கு வாழ்நாள் தடையை ரயில்வே விதிக்கக்கூடும்

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும், ரயில்வேயில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே அமைச்சகம் ஒரு பொது அறிவிப்பில், "ரயில்வேயில் வேலை பெற விரும்புபவர்கள், ரயில் பாதைகளில் போராட்டம், ரயில் செயல்பாடுகளுக்கு இடையூறு, ரயில்வே சொத்துகளுக்கு சேதம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கவனத்திற்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்பாடுகள் மிக உயர்ந்த அளவிலான ஒழுக்கமின்மையைக் காட்டுகின்றன. இது அத்தகைய விண்ணப்பதாரர்களை ரயில்வே வேலைகளுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது.

இதுபோன்ற செயல்கள் வீடியோக்கள் உதவியுடன் விசாரிக்கப்படும் என்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஆர்பாட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதுடன், அவர் ரயில்வே வேலை பெற வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் ரயில்வே அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

இந்த மாணவர்கள் ஆர்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ தேஜ் பிரதாப் யாதவ், "இந்தப் படங்கள் காஷ்மீரில் இருந்து அல்ல, பட்னாவிலிருந்து (பிகார்) வந்தவை. இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, NTPC தேர்வு எழுதியவர்கள். இவர்கள் மிருகத்தனமாக நடத்தப்படுகிறார்கள். பிகாரில் இரட்டை இஞ்சின் ஆட்சி ( மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியின் ஆட்சி) இருப்பதையும் பிகார் முதல்வர் தன்னை "சுஷாசன் பாபு" (சிறப்பான ஆட்சியாளர்) என்று கூறிக்கொள்வதையும் நினைவில் கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பிக்னா பஹாடியை அடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) எம்எல்ஏ சந்தீப் சௌரப், பிபிசி உடனான உரையாடலில், " இந்த காலியிடங்களுக்காக ஆர்ஆர்பி வெளியிட்ட அறிவிக்கையில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விடவும் 20 மடங்கு அதிக முடிவுகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே 35,000 காலியிடங்களுக்கு, 7 லட்சம் பேர் தகுதி பெற்றிருக்கவேண்டும். ஆனால் RRB 3.5 லட்சம் பேரின் முடிவை மட்டுமே வழங்கியுள்ளது," என்றார்.

ஒரு நபரின் பெயர் ஆறு நிலைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் அறிவிக்கையிலிருந்து நீங்கள் பின்வாங்குகிறீர்கள் என்றே அர்த்தமாகிறது. இது மாணவர்கள் மீது இழைக்கப்பட்டும் அநீதியாகும். இதற்கு எதிராக களமிறங்கிய மாணவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

"தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆர்ப்பாட்டங்கள் நடப்பதற்கு முன்னதாகவே அரசு மற்றும் ரயில்வேக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தனர். நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர். நம்பர் ஒன் ட்ரெண்டாக இது இருந்தது. ஆனால் மாணவர்களின் எல்லா கோரிக்கைகளையும் அரசு புறக்கணித்தது," என்று சந்தீப் தெரிவித்தார்.

"கடைசி கட்ட நடவடிக்கையாக மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். எதிர்ப்பாளர்களின் குரல்களை வன்முறை மூலம் ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. வேலை தேடும் லட்சக் கணக்கானவர்களுக்கு நீதிகிடைக்கும் வகையில் அரசு தனது பிடிவாதத்தைகைவிட வேண்டும்,"என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கு சட்டத்தின் ஆட்சி நிலவும் - நிர்வாகம்

" என்டிபிசி நடத்திய தேர்வில் குளறுபடி ஏற்பட்டது என்று மாணவர்கள் கூறுகின்றனர். இது எவ்வளவு தூரம் சரி அல்லது தவறு என்று நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். ஆனால் அவர்கள் இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. திங்கட்கிழமை ரயில் பாதையை மறித்த அவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்தனர்." என்று பிக்னா பஹாடி பகுதியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் குறித்து மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்து கொண்ட நிர்வாக அதிகாரி எம்.எஸ். கான் தெரிவித்தார்.

" ஐந்து பேர் கொண்ட பிரதிநிதிக்குழு ஆர்.ஆர்.பி அலுவலகத்திற்கு சென்று, தங்கள் தரப்பை முன்வைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நாங்கள் இன்று அவர்களிடம் யோசனை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இங்குள்ள எல்லா மாணவர்களும் தலைமை இன்றி செயல்படுகின்றனர். மேலும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். பல போலீசார் காயமடைந்துள்ளனர். இங்கு சட்டத்தின் ஆட்சி நிலவும்," என்று எம்.எஸ். கான் மேலும் தெரிவித்தார்.

குடியரசு தினத்தை ஓட்டி மாணவர்கள் புதன்கிழமை போராட்டத்தை சிறிதே குறைத்துள்ளனர். ஆனால் வரும் 28ஆம் தேதி நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அவர்கள் தரப்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தேர்வு எழுதியவர்களின் குழு புதன்கிழமை கூடுகிறது. இதற்கிடையில் பல மாணவர்கள் 28ஆம் தேதி நாடு தழுவிய 'பாரத் பந்த்' அறிவித்துள்ளனர். குரூப் டி தேர்வு தொடர்பாக வெளியான இந்தப் புதிய உத்தரவை எதிர்த்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் பிகார் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Bihar protesters torched four empty coaches of a stationary train in Gaya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X