மீண்டும் தூசி தட்டப்படும் சல்மான்கான் ”கார் விபத்து வழக்கு”- மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு
மும்பை: மும்பையில் பிளாட்பார்மில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கில் இருந்து நடிகர் சல்மான் கானை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு நேற்று மனுத் தாக்கல் செய்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சல்மான் கான் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதில், அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார்.
சல்மான் கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு நேற்று மேல்முறையீடு செய்தது.












Click it and Unblock the Notifications