• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிடக் கூடாது' - ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த விளக்கம்

By BBC News தமிழ்
|
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
BBC
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

'ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பது சனாதன தர்மம் அல்ல' என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். முன்னதாக, சனாதன தர்மம் தொடர்பாக அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் தற்போதைய பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ' மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தில் இருந்து நம்முடைய கலாசாரம், பண்பு ஆகியவை காப்பாற்றப்பட்டிருப்பதற்குக் காரணம் ஞானிகள்தான். ஞானமும் பதவியும் ஒன்று சேராது எனும்போது ஆர்.என்.ரவியை போன்றவர்கள் ஆளுநராக வருவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்றார்.

மேலும், 'இந்தியாவில் உள்ள 60 கோடி மக்கள், மற்றவர்களைச் சார்ந்து உள்ளனர். குடும்ப அமைப்பில் தம்மைப் பார்த்துக் கொள்ளாதவர்களை மற்றவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். வெளிநாடுகளில் 55 சதவீத திருமணங்கள் விவாகரத்தில்தான் முடிகின்றன. அங்கெல்லாம் வயதானவர்களை யார் பார்த்துக் கொள்வது என்ற சிக்கல் உள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட நிலைகள் எதுவும் இல்லை. இதற்குக் காரணம் நமது பண்பாடு, கலாசாரம் ஆகியவைதான்' எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு மிகப் பெரிய சக்தியை வழங்கினாலும், மிகப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டை நீண்டகாலமாக ஆங்கிலேயர்கள் ஆண்டதால் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், கலாசாரரீதியாகவும் ஏராளமானவற்றை நாம் இழந்தோம். இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு தர்மத்தின் விதிகளில் இருந்து மனிதர்களின் வாழ்க்கை திசைதிருப்பப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் வெளியில் சொல்லப்பட்ட மதச்சார்பின்மைக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது' என்றார்.

மேலும், ' சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இவை இரண்டும் வேறு வேறானவை. ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அனைத்து கடவுள்கள் மற்றும் மதங்களுக்கு நமது நாட்டில் இடம் உள்ளது. இங்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட சனாதன தர்மத்தைப் பின்பற்றியுள்ளனர்' எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, சென்னை வானகரத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, 'பாரதம் என்பது சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டது. மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் ஆகியவற்றைப் போல நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் கொள்கைகளும் மாறுபடலாம். வேற்றுமையில் ஒற்றுமையைப் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் சனாதன தர்மமும் கூறுகிறது. நாட்டில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி என்பது அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்' எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ' ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலைப்புச் சட்டமானது, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. புத்த மதத் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவைதான். நாட்டின் தலைமைப் பதவியில் உள்ளவர்கள், ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும்' எனவும் பேசினார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, 'சனாதனத்துக்கு ஆதரவாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் பேசுவது சரியானதல்ல. மதவாதம், சனாதன தர்மம், வருணாசிரமம் மற்றும் வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு கூறுவது ஏற்புடையதல்ல. இந்தக் கருத்துகளை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ' ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளராகவோ, கொள்கைப் பரப்புச் செயலாளராகவோகூட ஆளுநர் செயல்படலாம்' என விமர்சித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க முயல்வதாகவும் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடியிருந்தார். இந்தநிலையில், 'சனாதனத்தை மதத்துடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது' என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=yl5alnKQfmY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
sanatana and religion are different, says tamilnadu governor r n ravi in mylapore meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X