மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு... ஏப்ரல் 9ல் விசாரணை!

டெல்லி : மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அறிவித்த காவிரி இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனை கண்டித்து மார்ச் 31ல் மத்திய நீர்வளத்துறை செயலாளர், மத்திய கேபினட் செயலாளர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு தமிழக வழக்கறிஞர் உமாபதி உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தையால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல காவிரி பிரச்னைக்கு தீர்வு தரக்கூடிய இதர அம்சங்களையும் உள்ளடக்கியது தான் என்று கூறியுள்ளார். மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும், அதற்கான வழிமுறைகளை நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட உள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!