அனுமதி மீறி வி.எச்.பி பேரணி! 'நு' மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது போலீஸ்.. ஹரியானாவில் பதற்றம்
சண்டிகர்: மத கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 'நு' மாவட்டத்தில் இன்று 'ஷோபா யாத்திரை' மேற்கொள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நு மாவட்டத்தில் கடந்த மாதம் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் பேரணியை நடத்தினர். இதனை அம்மாவட்ட பாஜக தலைவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த பேரணியில் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல்தான் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில் 2 போலீசார் மற்றும் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்தையடுத்து 5 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. வன்முறையின் ஒரு பகுதியாக செக்டார் 57ல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது அந்த மசூதியில் இமாமாக பணியாற்றி வந்த 19 வயது ஹபீஸ் சாத் கொல்லப்பட்டுள்ளார். கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 120க்கும் அதிகமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் நடந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், கலவரம் நடந்த 'நு' மாவட்டத்தில் இன்று மீண்டும் பேரணி நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஆனால் இந்த பேரணிக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இருப்பினும் பேரணி நடத்துவதில் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுதியாக இருக்கிறது. எனவே நு மாவட்டத்தில் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 1,900 போலீசார் மற்றும் 24 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மொபைல் இன்டெர்நெட் சேவை மற்றும் பல்க் எஸ்எம்எஸ் அனுப்பும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர சாலை போக்குவரத்திலும் சில மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. நு மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல இன்று கல்வி நிலையங்கள் மற்றும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications