என் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.. வேட்பாளர்கள் விளம்பரம் கொடுக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள வேட்பாளர்கள் குறித்த விவரங்களை பத்திரிகைகளில் அந்தந்த கட்சிகளே வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரியும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தற்போது சட்டம் இருந்தாலும், அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
[குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாலேயே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட்]

இன்று தீர்ப்பு
கிரிமினல் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட உடனோ அல்லது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட உடனோ அந்த நபர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் பட்சத்தில் குற்றப் பின்னணி உடையவர்கள் அரசியலில் நுழைவதைத் தடுக்க முடியும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நாடாளுமன்றம்
அப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே, வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்றும், நாடாளுமன்றம்தான் இதுகுறித்து உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

விளம்பரம்
அதே நேரம், பணம் மற்றும் அதிகார பலம் அரசியலில் அதிகரித்து வருவதாக தீபக் மிஸ்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதுகுறித்து அதிகம்பேரை சென்றடையும் ஊடகங்கள் வழியாகவும், கட்சி வெப்சைட்டிலும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், மக்களுக்கு தங்கள் வேட்பாளர் மீதான வழக்கு விவரம் தெரியவரும். மக்களே இறுதி முடிவை எடுத்துக்கொள்ளட்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தானே விளம்பரம் கொடுத்த தானை தலைவன்
ஒருவேளை, சுயேச்சை வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்கள் தங்களுக்கு தாங்களே விளம்பரம் கொடுத்துக்கொள்ள வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications