சண்டிகர் மேயர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
சண்டிகர்:சண்டிகர் மேயர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது, செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்த சண்டிகர் மாநகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதை "இந்தியா" கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது.. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார்.

மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் தேர்தலுக்கு முன்பு "இந்தியா" கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையான சாடின. இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மிகவும் காட்டமான கருத்துக்களை முன்வைத்தது. ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் . தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயகத்தைப் படுகொலை செய்வது போன்றது என்று கூறியது. நேற்று இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தது. முன்னதாக நேற்று முன் தினம், சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசி, நேரில் ஆஜராகி நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்துள்ளது.
அதனால் நாங்களே ஆவணங்களை ஆய்வு செய்ய போகிறோம். வாக்கு சீட்டுகளையும், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளையும் டெல்லிக்கு கொண்டுவர வேண்டும். ஆவணங்களை 20 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நாங்கள் ஆய்வு செய்வோம்" என்று கூறியது.
அதன்படி, இந்த வழக்கு இன்று பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் எனவும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளையும் சேர்த்து எண்ண வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications