காஷ்மீர் டிஜிபி படுகொலை-உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கான சிறு பரிசாம்..பயங்கரவாத இயக்கம் கொக்கரிப்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த்குமார் லோஹியா (லோகியா) படுகொலைக்கு பொறுப்பேற்பதாக பயங்கரவாத இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய தாக்குதல்கள் தொடரும் எனவும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
ஜம்மு நகரில் உதய்வாலா பகுதியில் சிறைத்துறை டிஜிபி லோஹியா வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டிஜிபியாக அவர் பதவி உயர்வு பெற்றார்.

டிஜிபி லோஹியா தமது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் லோஹியா வீட்டில் பணிபுரிந்த நபர் மாயமானது தெரியவந்தது. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் டிஜிபி லோஹியா மரணம் பெரும் பதற்றத்தையும் அங்கு ஏற்படுத்தியது. மேலும் பாதுகாப்பு படையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது People's Anti-Fascist Force என்ற அமைப்பு டிஜிபி லோஹியாவின் படுகொலைக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி அமைப்புகளில் ஒன்று. டிஜிபி லோஹியா படுகொலைக்கு பொறுப்பேற்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது அந்த அமைப்பு.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு எனவும் அறிவித்திருக்கிறது அந்த பயங்கரவாத இயக்கம்.ஜம்மு காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் மீது நடந்த தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்கிறோம் என்கிறது People's Anti-Fascist Force.
ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டி, அவருக்கு நாங்கள் தரும் சிறு பரிசு இது எனவும் கொக்கரித்திருக்கிறது People's Anti-Fascist Force . இனிவரும் நாட்களிலும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்துவோம் எனவும் எச்சரித்து மிரட்டல் விடுத்திருக்கிறது அந்த இயக்கம்.












Click it and Unblock the Notifications