செம.. நீதிபதிக்கு 31 வருஷமா அப்பா "டிரைவர்".. கடின உழைப்பால் "ஜட்ஜ்" ஆன மகள்.. இதுதான் சாதனை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 31 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓட்டுநராக பணிபுரிந்தவரின் மகள் ஒருவர் நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் 6ம் வகுப்பிலிருந்து நீதிபதியாக வேண்டும் என்று கனவு கண்டிருந்ததாகவும் அதனை நோக்கி எடுத்த முயற்சிகளையடுத்தே தற்போது தேர்வாகியுள்ளதாகவும் ஓட்டுநரின் மகள் கூறியுள்ளார்.
மட்டுமல்லாது இந்த போராட்டத்தில் தனியார் பயிற்சி அமைப்புகளின் ஏமாற்று தனத்தையும் அவர் விரிவாக கூறியுள்ளார்.

6ம் வகுப்பிலிருந்து தொடர்ந்த கனவு
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 31 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ராஜேந்திர கெலாட். இவரின் மகளான கார்த்திகா கெலாட்தான் தற்போது நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பேட்டியில் கார்த்திகா கெலாட் கூறியதாவது, "என் தந்தை பல ஆண்டுகளாக நீதிபதிகளுக்கு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். எனவே இந்த புறச்சூழல்தான் நான் நீதிபதியாக உருவாக வேண்டும் என என்னை தூண்டியது. இதற்கான கனவு 6ம் வகுப்பிலிருந்தே தொடங்கிவிட்டது.

பெற்றோர்களின் ஆதரவு
நான் ஜோத்பூரில் உள்ள செயின்ட் ஆஸ்டின் சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளிக் கல்வியும், ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தில் பிபிஏ.எல்எல்பியும் படித்து பட்டம் பெற்றேன். இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் பட்டம் பெற்றேன். இந்த தேர்வில் வெற்றியடைய கொரோனா தொற்று காலத்திலேயே நான் முயற்சிகளை தொடங்கிவிட்டேன். இக்காலகட்டங்களில் தேர்வுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்படியான காலத்தில் எனக்கு உடன் நின்றவர்கள் எனது பெற்றோர்கள்தான்.

ஆசான்கள்
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மண்டல் பிரசாத் போஹ்ரா மற்றும் வழக்கறிஞர் தர்மேந்திர சுரானா ஆகியோரிடமிருந்து பல்வேறு விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். இந்த தேர்வின் நுணுக்கங்கள் எல்லாம் இவர்களிடமிருந்து கற்றதுதான். மற்றொருபுறம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரத்தன் லஹோதி ஜி மற்றும் எனது பள்ளியின் முன்னாள் முதல்வர் போஜ்ராஜ் வியாஸ் ஆகியோர் என்னை நேர்காணலுக்கு தயார் படுத்தினார்கள்.

நம்பிக்கை
இவர்களின் வழிகாட்டுதலும் என்னுடைய உழைப்பும் இல்லாமல் என்னால் இந்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியாது. என்னுடைய நோக்கம் விரைவாக நீதி வழங்குவதுதான். என்னுடைய பெற்றோர் அடிக்கடி ஒன்றை சொல்வார்கள். அதாவது, "உன்னுடைய நீதிமன்றத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை நீ உறுதி செய்ய வேண்டும்" என்பதுதான் அது எனவே அதை நான் உறுதியாக கடைப்பிடிப்பேன். மேலும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் விரைவான நீதியை வழங்க முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

கோச்சிங் சென்டர்களின் அராஜகம்
நீதிபதியாகும் எனது இந்த போராட்டத்தின் முக்கிய அம்சம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் தொடக்கத்தில் ஜோத்பூரில் இருந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தேன். ஆனால் அவர்கள் இதனை இழுத்து மூடிவிட்டு ஜெய்பூருக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். என்னால் அங்கு சென்று இந்த பயிற்சியை தொடர முடியாது. எனவே நான் பணத்தை திரும்ப கேட்டேன். அவர், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்குமாறு கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்து பணத்தை மீண்டும் கேட்டேன்.

உறுதி
அப்போது அவர்கள் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியமானவை. அதாவது, 'எங்களிடம் பயிற்சி பெறாமல் உங்களால் இந்திய நீதித்துறையில் காலடி எடுத்து வைக்க முடியாது' என்பதுதான் அது. ஆனால் நான் இப்போது ஒரு நீதிபதி. இந்த செய்தியை நிச்சயம் அவர்கள் காண வேண்டும்" என்று கார்த்திகா கெலாட் பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications