"போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கிடையாது பூங்கொத்து தான்" குஜராத் அரசு வினோத அறிவிப்பு!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தீபாவளியையொட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கமாட்டார்கள் என்றும் பூங்கொத்து தான் வழங்குவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலால் ஒருப்பக்கம் வாகன ஓட்டிகள் திண்டாடி வரும் நிலையில், விபத்துக்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெரும்பாலும் விபத்துக்களுக்கு சாலை விதிகளை முறையாக பின்பற்றாததே காரணம் என்று சொல்லப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்
இதனால், விபத்துக்களை குறைப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை போக்குவரத்து துறையும் நெடுஞ்சாலைத்துறையும் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூட போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கையாக அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சலுகையாக..
சாலைகளில் சிக்னல்களை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணிய மறுப்பது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்கள் விபத்துக்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைவதால் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு நிர்வாகங்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பாஜக ஆளும் குஜராத்தில் தீபாவளிக்காக போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டாலும் அபராதம் விதிக்கப்படாது என்ற வினோத அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அபராதம் கிடையாது
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, வருகிற 27 ஆம் தேதி வரை போக்குவரத்து விதி மீறல்களுக்காக அபராதங்களை போலீசார் வசூலிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவின் படி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்த அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி, '' வருகிற 27 ஆம் தேதி வரை குஜராத்தில் போக்குவரத்து போலீசார் அபராத தொகையை வசூலிக்க மாட்டார்கள்.

பூங்கொத்து கொடுப்பார்கள்
ஹெல்மெட் அணியாமல் செல்வது ஓட்டுநர் உரிமம் இன்றி பயணிப்பது உள்பட எந்த போக்குவரத்து விதி மீறலாக இருந்தாலும் அபராதம் வசூலிக்கப்படாது. போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு பூங்கொத்துக்களை போலீசார் வழங்குவர். இதனால், போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அபராதம் மட்டும் வசூலிக்க மாட்டார்கள்.'' என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள் கேள்வி
போக்குவரத்து விதி மீறல்களே விபத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் விதி மீறல்களை கட்டுப்படுத்த போக்குவரத்து சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படியே அபராத தொகைகளும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களையும் விதிமீறல்களையும் குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் கூறி வரும் நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே இப்படி அறிவிக்கலாமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்தடுத்து சலுகைகள்
குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை குஜராத் அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்த மாநிலத்தில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் வசூலிக்க வேண்டியதில்லை என்ற புதிய அறிவிப்பும் வெளியாகி இருப்பது அரசியல் ரீதியிலும் விமர்சனங்களை பெறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications