
இமாச்சலில் பாஜக- காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த அதிருப்தி வேட்பாளர்கள்.. 4 தொகுதிகளில் லீடிங்!
சிம்லா: இமாசல பிரதேசத்தில் பாஜக சீட் கொடுக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேபோல், காங்கிரஸ் மீதான அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்ட ஒருவரும் முன்னிலையில் உள்ளார்.
68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.
தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இமாசல பிரதேசத்தில் இந்த முறையும் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின.
குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி. காங் நிலவரம் என்ன?

மாறி மாறி முன்னிலை
காங்கிரஸ் கட்சி டஃப் பைட் கொடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சில கூறியிருந்தன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இமாசல பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஏனெனில் பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி பாஜக 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிருப்தி வேட்பாளர்கள் முன்னிலை
டி 20 போட்டியின் கடைசி 5 ஓவர்கள் போல முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டு இருப்பது பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினருக்கும் டென்ஷனை எகிர வைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட்ட 4 பேர் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில், 3 பேர் பாஜக சீட் கொடுக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆவர்.

ஆட்சி அமைக்க ஆதரவு தேவையா?
நலகர் தொகுதியில் போட்டியிட பாஜக அதிருப்தியாளர் கேஎல் தாகூரும், தேரா தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் ஹோஷியார் சிங்கும் முன்னிலை வகிக்கின்றனர். அதோபோல், காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட ஆஷிஷ் குமாரும் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த 4 பேரும் முன்னிலை வகிப்பது காங்கிரஸ் - பாஜக என இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைப்பதில் பெரும் தாக்கத்தை கொடுக்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெற முடியாவிட்டால் இவர்களின் ஆதரவு ஆட்சி அமைக்க கண்டிப்பாக தேவைப்படும்.

வெற்றியாக மாறுமா?
இதனால், தற்போது முன்னிலை வகித்து வரும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு மவுசு கூடும் என்று தெரிகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பெரும்பான்மை பெறாவிட்டால் இவர்கள் யாருக்கு ஆதரவை பெற்றே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வரும். அப்போது அதிருப்தி அடைந்து சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கும் இந்த வேட்பாளர்கள் பெரும் டிமாண்ட் வைக்கவும் வாய்ப்பாக அமையும். ஆனால் இந்த முன்னிலை கடைசி வரை நீடித்து வெற்றியாக மாறுமா? என்பதை இன்னும் பார்க்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும். அதன்பிறகே இறுதி முடிவு தெரியவரும்