காஷ்மீரை 'கைகழுவி' சிக்கிம் சென்ற சுற்றுலா பயணிகள்- பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் தவிப்பு!
டெல்லி: பாகிஸ்தான் ஆதரவு வெறிபிடித்த பயங்கரவாதிகள், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுப் படுகொலை செய்ததால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் பயணிப்பது அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டார்ஜிலிங் மற்றும் சிக்கிமில் பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். சிக்கிமில் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,000க்கும் மேற்பட சுற்றுலாப் பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் மிக முக்கியமான சுற்றுலா தலமான பஹல்காம் பள்ளத்தாக்கு இப்போது மயான பூமியாகிவிட்டது. பஹல்காம் பள்ளத்தாக்கில் குதிரைகள் மூலம் பயணித்து பெருமலைகள், பனிப்பாறைகள், பெருநதியை கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேரைதான் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெறிபிடித்த விலங்குகளைப் போல சுட்டுப் படுகொலை செய்துவிட்டனர். இதனால் பஹல்காம் மட்டுமல்ல ஜம்மு காஷ்மீரும் இப்போது சுற்றுலா பயணிகளால் கை கழுவப்பட்ட சூனிய பிரதேசமாகிவிட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் உக்கிரமான பதிலடியைத் தரும் என்கிற சூழ்நிலை நிலவுவதால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் பயணிப்பது அடியோ நின்றுவிட்டது.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கவனம் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் அதனை ஒட்டிய சிக்கிம் சுற்றுலா பிரதேசங்களை நோக்கி திரும்பியுள்ளது. மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து டார்ஜிலிங், சிக்கிம் செல்லும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நியூ ஜல்பைகுரியில் இருந்து நேபாளத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் நேபாளத்துக்கும் சென்று திரும்பும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் டார்ஜிலிங், சிக்கிமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே சிக்கிமில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இப்பெருமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த பெருமழை, நிலச்சரிவில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி உள்ளனர். இவர்களை அம்மாநில அரசின் காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பகுதிகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications