For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?

By BBC News தமிழ்
|
உத்தரப்பிரதேச தேர்தல்
Getty Images
உத்தரப்பிரதேச தேர்தல்

1990 செப்டம்பர் 25 அன்று குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இருந்து லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன், ஆகஸ்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார். வி.பி.சிங்கின் இந்த அறிவிப்பு பாஜகவை உலுக்கியது.

பிஜேபி தலைவர்கள் நாட்டின் அரசியலில் ஜாதியின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டவர்கள். மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் நீண்டகால அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ள, அந்த நேரத்தில் பாஜக 'இந்துக்கள் ஒற்றுமை' என்ற முழக்கத்தைக் கையிலெடுத்து ராமர் கோயில் இயக்கத்தைத் தீவிரப்படுத்தியது.

இப்போது 2022-ல் உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்கள் 1990-ன் நிகழ்வுகளை நினைவுபடுத்துபவையாக உள்ளன.

கடந்த மூன்று நாட்களாக பா.ஜ.க வை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களில் பலர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அயோத்தி தொகுதியிலிருந்து யோகி ஆதித்யநாத் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இன்னும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கோயிலா? (மண்டல்)கமிஷனா?

தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகி ஓரிடம் சேர்வது குறித்து வல்லுநர்கள் பல கருத்துகளை வெளியிட்டு வந்தாலும், 1990 முதல் இன்று வரை அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள், சரித்திரம் மீண்டும் திரும்புவதாகவே கருதுகின்றனர்.

மூத்த பத்திரிக்கையாளர் நீர்ஜா சௌத்ரி, "இந்த முறை உத்தரபிரதேசத்தில் நடக்கும் போரை 'மண்டல்' வெர்சஸ் 'மந்திர்' அதாவது கோயிலுக்கும் கமிஷனுக்குமான போட்டியாகத் தான் பார்க்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்தது இன்று மீண்டும் நடக்கிறது. இந்த முப்பது வருடங்களில் கோயிலும் இட ஒதுக்கீடும் எங்கும் சென்று விடவில்லை. அதே நிலை தான் நிலவுகிறது. இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மகாதலித்துகள் என அனைவரும் தங்களின் பங்கைக் கேட்கின்றனர். இப்போது பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் இருந்த 'ஆதிக்க சாதியினர்' தன் பங்கை மட்டும் கேட்கவில்லை. இன்னும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று இதுவரை அழைக்கப்படாத, ஜாட் உட்பட்ட சமூகங்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்கக் கோருகின்றன. இந்தச் சிக்கல் இன்னும் தீரவில்லை," என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, "அகிலேஷ் இப்போது முன்னர் முலாயம் எடுத்த அதே துருப்புச்சீட்டைத் தான் எடுத்துள்ளார். இஸ்லாமியர்களும் (M) யாதவர்களும் (Y) சேர்ந்தால் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்று முலாயம் சிங் கூறுவார். இப்போது MY என்பது MY+ ஆகிவிட்டது. வேலையில்லா திண்டாட்டம், கோவிட் மற்றும் பணவீக்கத்தில் மோசமான நிர்வாகம் போன்ற பிரச்சனைகளை எஸ்பி எழுப்பினாலும், மக்களின் சாதி அடிப்படையில் தான் அதை முன்னெடுக்கிறார்கள்." என்று விளக்கினார்.

அகிலேஷ் யாதவின் இந்த உத்திய உடைக்கவேண்டி, பாஜக இரண்டு நாட்களாகத் தொடர் மாரத்தான் கூட்டங்களையும் நடத்தின. இருப்பினும், அந்தக் கூட்டங்களில் வேட்பாளர் தேர்வு குறித்த விவாதம் நடந்ததாகவே கூறப்படுகிறது.

அந்தக் கூட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் நீர்ஜா சவுத்ரி, "இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது என்று பாஜக ஒரு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யோகி ஆதித்யநாத் அயோத்தியில் இருந்து போட்டியிடுவார் என்ற செய்தி வெளியானது. பாஜகவின் அரசியலில் அயோத்தியாவுக்குத் தனி இடம் உள்ளது அனைவரும் அறிந்ததே." என்கிறார்.

ஆனால், இது குறித்த எந்த அறிவிப்பும் அக்கட்சியின் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

நீர்ஜா அயோத்தியை இந்துத்துவாவுடன் இணைத்துப் பார்க்கவில்லை. அவர் அதைக் கோயில் பிரச்சினை என்று தான் கருதுகிறார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன், பிரதமர் மோதியே காசி வழித்தடத்தை திறந்து வைத்தார். உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, மதுரா கோவில் பிரச்னையை எழுப்பினார். அதனால்தான் இந்த முறை கோயிலா (மண்டல்)கமிஷனா என்ற அடிப்படையில் தான் தேர்தல் இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

இருப்பினும், 1992-க்குப் பிறகு, கோயில் விவகாரம் பாஜகவுக்கு பெரிதாகப் பயனளிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

உயர் சாதியா பிற்படுத்தப்பட்டோர் நலனா

லக்னோவின் மூத்த பத்திரிக்கையாளர் நாகேந்திர பிரதாப், பாஜகவின் அயோத்தி வியூகம் இந்த முறை வேலை செய்யாது என்ற நீர்ஜா சவுத்ரியின் கருத்தை ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், இந்த முறை தேர்தல் கோயிலா கமிஷனா என்ற அடிப்படையில் இருக்காது என்றும் 'உயர் சாதினருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்குமான' போட்டியாகத் தான் இருக்கும் என்று இவர் கணிக்கிறார்.

பிபிசியுடனான உரையாடலில், "பாஜக நிச்சயமாக இந்துத்துவா அட்டையை விளையாட முயல்கிறது, அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால் உயர் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தல் இருந்தால், அது பாஜகவுக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். 2014, 2019 லோக் சபா தேர்தலாகட்டும் 2017 சட்ட சபைத் தேர்தலாகட்டும் பிற்படுத்தப்பட்டோர் ஓரணியில் கூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது," என்று தெரிவிக்கிறார்.

2014ல் குஜராத் மாதிரியில் தேர்தல் நடத்தப்பட்டது. 2017 மற்றும் 2019 இல், பிற்படுத்தப்பட்டவர்கள், ஜாடவ் மற்றும் யாதவர்கள் அனைவரும் இந்துக்களாகவே கருதினர். ஆனால் இந்த முறை நிலைமை வேறு. பிற்படுத்தப்பட்டவர், தலித் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என அனைவரும், பாஜக மீண்டும் மீண்டும் இந்துத்துவாவையே வலியுறுத்துவதாக உணர்கிறார்கள். இதன் காரணமாக, 2019 இல் இருந்ததைப் போலவும் மீண்டும் பாஜக விரும்பும் விதத்திலும் இந்த முறை இந்துத்துவா வாதம் செயல்படப் போவதில்லை. முன்பு பா.ஜ.க.வுக்குச் சென்றிணைந்த ஒரு பெரிய கூட்டமும் இப்போது ஏமாற்றத்தில் இருக்கிறது. அனைத்துப் பழைய சங்க/பாஜக ஆதரவாளர்களும் யோகி-மோடியின் கடுமையான இந்துத்துவாவால் சோர்வடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா, "தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களால் ஆட்சி அமைக்கப்படும் ஆனால் பயனடைவது அந்த 5 % உயர் சாதியினர். 80-க்கும் 20-க்குமான மோதல் என்று நீங்கள் கூறுகிறீர்கள். 80-20 அல்ல, நான் கூறுகிறேன், 15-85. 85 நாங்கள். 15-லும் பிரிவினை உள்ளது" என்று கூறியிருந்தார்.

சுவாமி பிரசாத் மௌரியாவின் வார்த்தைகளால் நாகேந்திரனின் கருத்து வலுப்பெறுகிறது.

நாகேந்திரா மேலும் எச்சரிக்கிறார், "உத்தரப்பிரதேசத்தில் உயர்சாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மோதல் என்று நான் கூறும்போது, எந்தக் கட்சியும் வேண்டுமென்றே இதைச் செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். இது தானாக நடக்கும். அரசியல் கட்சிகள் இதைத் தூண்டினால், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். இதை எந்தக் கட்சி கடைபிடித்தாலும் நிர்வாகத்தை நடத்த முடியாது.

பாஜக கூட மதவாதப் பிரிவினைக்கு முயன்று பார்க்கலாமே அன்றி சாதியின் பெயரால் பிரிவினை செய்யாது. பாஜக உயர் சாதியினரின் கட்சி என்று தொடக்கத்திலிருந்தே அறியப்பட்டாலும், கடந்த தேர்தலில் பெற்ற யாதவ் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளையும் அவர்கள் பெற விரும்புகிறார்கள்.

இருப்பினும், இது குறித்து நீர்ஜா கூறுகையில், "சில யாதவ் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்டோரின் முகங்கள் சமாஜ்வாதி கட்சிக்குச் சென்றுவிட்டதால் யாதவ் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாஜகவை விட்டு வெளியேறுவார்கள் என்று அர்த்தமில்லை. 2017 இல், பிஜேபி 61% யாதவ் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளைப் பெற்றது, இது எந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதுவரை நடக்காதது," என்று தெரிவித்தார்.

யாதவ் அல்லாத ஓபிசிக்கள் பிஜேபியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைவது போன்ற வியூகத்தின் மூலம் அவர்கள் ஒரு சூழலை உருவாக்குகிறார்கள் என்கிறார் நீர்ஜா. "அனைத்து அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ஒரே நேரத்தில் பாஜகவை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் ஒவ்வொருவராக வெளியேறுவது எல்லாம் வியூகத்தின் ஒரு பகுதி என்பதைக் காட்டுகிறது. சூழலை உருவாக்க முயற்சி நடக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக, பா.ஜ.க, 'தற்காப்பு' நிலைப்பாட்டில் தான் காணப்படுகிறது. தங்கள் சொந்த நிலைப்பாட்டைத் தீர்மானிக்க முடியாத வாக்காளர்களுக்கு, இந்தச் சூழல் மிகவும் முக்கியமானது."

பிராமணர்களின் கோபம்

அனைத்துப் பிற்படுத்தப்பட்டவர்களும் சமாஜ்வாதி கட்சிக்குச் செல்ல மாட்டார்கள் என்ற கருத்தில் மூத்த பத்திரிகையாளர் அனில் யாதவும் நீர்ஜா சவுத்ரியுடன் உடன்படுகிறார்.

அனில் யாதவ் உத்தரபிரதேச அரசியலை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறார்.

பிபிசியுடனான உரையாடலில் அவர், "மண்டல் கமிஷன், ராமர் கோயில், இந்துத்துவா இவற்றுக்கிடையே பிராமணர்களின் மனக்கசப்பு பாஜகவின் கவலையை அதிகரித்துள்ளது.

பிஜேபியில் ஏற்பட்ட அமளியில் பிராமணர்களின் பங்கும் குறைந்ததில்லை. பிராமணர்களும் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்று அனில் யாதவ் கூறுகிறார். அவர்களின் அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள சமாஜ்வாதி முனைந்துள்ளதாக இவர் கருதுகிறார்.

"பாஜக நிஷாத் கட்சியை தங்களுக்கு ஆதரவாகப் பெற்றுள்ள நிலையில், நிஷாத் வாக்கு வங்கி தங்கள் முகாமிற்கு வரவில்லை என்றால், பூர்வாஞ்சலில் பிராமணர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க சமாஜ்வாதி கட்சி நினைக்கிறது," என்கிறார் அனில் யாதவ்.

அது வரும் நாட்களில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் தேர்வில் தெளிவாக வெளிப்படும் என்பது இவரது கணிப்பு.

மேலும் அவர் கூறுகையில், "பாஜகவுக்கு எதிராக ஐந்தாண்டுகளாக ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது. ஆனால், பாஜகவை விட்டு வெளியேறும் தலைவர்கள் இந்தப் பதவி எதிர்ப்பு அலையைத் தூண்டி விடுகின்றனர். அவத் மற்றும் பூர்வாஞ்சலில் ஆசிரியர் நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு கிடைக்காதது, அவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஓர் எதிர்ப்பாக உருவெடுத்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா போன்ற தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. யோகி அரசு அவர்களது குறைகளை நீக்கி விடுவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்குள் பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசு என்ற பெயரை அந்த அரசு பெற்றுவிட்டது," என்று தெரிவித்தார்.

இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில், தற்போது பாஜகவின் தேர்தல் இயந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதை மறந்துவிடக் கூடாது என்பதும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. தேர்தல் நாளில் மக்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்வது, வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்வது, பணம் செலவழிப்பது - இவையும் தேர்தலைப் பாதிக்கின்றன. சூழல் மற்றும் சித்தாந்தத்தைக் கடந்து இந்த விஷயங்களும் தேர்தல் அரசியலில் முக்கியப் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது, கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Am analysis on UP Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X