ஞானவாபி மசூதி: பூட்டப்பட்ட அறைகளிலும் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரும் மனு மீது இன்று விசாரணை!
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வாரணாசி ஞானவாபி மசூதியில் பூட்டப்பட்ட அனைத்து அறைகளிலும் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. இதனையடுத்து பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்புக்கு வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் 22-ந் தேதி திறப்பு விழா நடைபெற்றது.

அயோத்தி பாபர் மசூதி சர்ச்சையை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் மசூதிகள் இருக்கும் இடங்களில் கோவில்கள் இருந்தன என வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்நாட்டில் கோவில்கள் இருக்கும் இடங்களில் பவுத்த விகாரைகள் கட்டப்பட்டதாகவும் ஒரு சர்ச்சை நிலவுகிறது.
இத்தகைய சர்ச்சைகளில் ஒன்று உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஞானவாபி மசூதி. 1993-ம் ஆண்டு ஞானவாபி மசூதியின் நிலவறை பகுதியில் தாங்கள் பூஜை செய்து வந்தோம்; அதன் பிறகு மசூதி நிர்வாகம் நிலவறையை பூட்டிவிட்டது. தங்களது குடும்பத்தினர் மீண்டும் பூஜை நடத்த அனுமதி தர வேண்டும் என கோரி அர்ச்சகர் சோம்நாத் வியாஸின் பேரன் சைலேந்திரகுமார் பாடக் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நிலவறை பகுதியில் மீண்டும் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி தந்தது. இதனடிப்படையில் கடந்த வாரம் ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் நிலவறை திறக்கப்பட்டு அங்கு மீண்டும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதியில் நடத்திய ஆய்வறிக்கையில் பல்வேறு இந்து கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஸ்வ வேதிக் சனாதன சங்கத்தின் ராக்கி சிங் வாரணாசி நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத் தாக்கல் செய்தார். ஞானவாபி மசூதியில் பூட்டப்பட்ட அனைத்து அறைகளிலுமே தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்பது அம்மனு. இந்த மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதேபோல ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதித்த உத்தரவுக்கு எதிரான முஸ்லிம்கள் தரப்பின் மனுவையும் இன்று வாரணாசி நீதிமன்றம் விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications