Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆறே மாதத்தில் அஸ்தமனம் ஆன விகே பாண்டியனின் அரசியல் பயணம்.. ஒடிசாவில் பெற்றதும், இழந்ததும்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விகே பாண்டியன், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒடிசாவின் அடுத்த முதல்வர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 6 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது விகே பாண்டியன் அரசியல்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கார்த்திகேயன் பாண்டியன் தன்னுடன் சிவில் சர்வீசஸ் படிப்பை முடித்த சுஜாதா எனும் ஒடிசா மாநில அதிகாரியை திருமணம் செய்துகொண்டார். பிறகு பாண்டியனும் தனது பணியை ஒடிசாவுக்கு மாற்றிக்கொண்டார்.

vk pandian naveen patnaik odisha bjd


2007ஆம் ஆண்டு முதல் ஒடிசாவின் கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்தார் பாண்டியன். ஒடிசா மாநிலத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தை கையில் எடுத்து வெற்றிகரமாக பணியாற்றினார். கஞ்சம் கலெக்டராக இருந்த அவர், நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான மத்திய அரசின் NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றார்.

கஞ்சம் மாவட்டத்தில் NREGS திட்டத்தில் வங்கியில் ஊதியம் வழங்கும் புரட்சிகர முறையை அறிமுகப்படுத்தினார். அதன் வெற்றியைக் கண்டு, இந்த முறை இந்திய அரசால் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அவரது வெற்றிகரமான அணுகுமுறையின் விளைவாக முன்னணி மாற்றங்களுக்காக கஞ்சம் மாவட்டம் இரண்டு முறை குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது.

2011 ஆம் ஆண்டு வி.கே.பாண்டியனுக்கும் ஒடிசா மாநில அரசுக்கும் ஒரு முக்கியமான இன்னிங்ஸ் தொடங்கியது. முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார் விகே பாண்டியன். அதன்பிறகு, முதல்வர் நவீன் பட்நாயக், துடிப்பான, தொலைநோக்குப் பார்வை கொண்ட, ஆற்றல் மிக்க மற்றும் கடின உழைப்பாளியான வி.கே.பாண்டியன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார்.

விகே பாண்டியன் தனது சிறப்பான நிர்வாகத் திறமையால் ஒடிசா மாநில முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிடமும், ஒடிசா மக்களிடமும் நற்பெயர் பெற்றார். இதனால், முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல்வருக்கு நெருக்கமான அதிகாரியானார். ஒடிசாவில் மாற்றங்களை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட 5T செயலராக நியமிக்கப்பட்டார் பாண்டியன். அதன்படி மாநிலம் முழுவதும் பயணித்து சிறப்பாகப் பணியாற்றினார்.

முதல்வரின் நிழலாகத் தொடர்ந்த பாண்டியன் கடந்த அக்டோபரில் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகள் பணி இருக்கும் சூழலில், நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே ஐஏஎஸ் பதவியை உதறினார் பாண்டியன். வி.கே.பாண்டியன். உடனடியாக பாண்டியன் 5T துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

பிஜேடி கட்சியில் இணைந்த விகே பாண்டியனிடம் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் பொறுப்புகளை ஒப்படைத்தார் நவீன் பட்நாயக். இதனால், 24 மணி நேரமும் முதல்வர் நவீனின் நிழலாக அவரது வீட்டிலேயே பெரும்பாலான நேரம் தங்கி தீவிரமாக அரசியல் பணியாற்றினார் பாண்டியன்.

தேர்தலை ஒட்டி மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். மக்கள் மத்தியிலும் அவருக்கு பெரிய அளவில் ஆதரவு காணப்பட்டது. இதனால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் வி.கே.பாண்டியனை விமர்சனம் செய்தனர். பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஒடிசாவை ஒரு தமிழன் ஆளலாமா? என்றெல்லாம் வி.கே.பாண்டியனை குறிவைத்து விமர்சித்தனர்.

ஒடிசாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் உள்ள 21 எம்.பி தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட நவின் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் வெற்றி பெறவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைந்து 24 ஆண்டு காலமாக கைவசம் இருந்த ஆட்சியையும் இழந்தது.

இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது. தேர்தல் தோல்விக்கு வி.கே. பாண்டியன் தான் காரணம் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் அவரது பெயர் தான் முழுமையாக இருந்தது என்றும் பிஜேடி கட்சியினரே குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், நவீன் பட்நாயக் விகே பாண்டியனை விட்டுத்தரவில்லை.

பிஜேடி தோல்விக்கு வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே. பாண்டியன் கடுமையான உழைப்பாளி. கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா கால கட்டத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது. அதற்காக அவர் மதிக்கப்பட வேண்டும். விகே பாண்டியன் எனது கட்சியில் சேர்ந்தார், ஆனால் எந்த பதவியையும் வகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விகே பாண்டியன். இதுகுறித்து வி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பைப் பெற்றேன். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை.

மூதாதையர்களின் சொத்துக்கள் தான் தற்போது என் வசம் உள்ளது.
ஒடிசா மக்களின் அன்பை சம்பாதித்துள்ளது பெரும் பாக்கியம். என் வாழ்நாளில் நான் சம்பாதித்தது ஒடிசா மக்களின் அன்புதான். நான் ஐஏஎஸ் ஆகும் போது இருந்த எனது முன்னோரின் சொத்துக்களே இப்போதும் என்னிடம் உள்ளது. நவீன் பட்நாயக்கிற்கு உதவி செய்வதற்காக மட்டும்தான். இந்நிலையில், தற்போது அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன். யாரையும் சிரமத்திற்குள்ளாக்கியிருந்தால் மன்னித்து கொள்ளவும்.

நவீன் பட்நாயக்கிற்காகவே வந்தேன்.. பதவி ஆசையால் வரவில்லை.. அரசியலில் இருந்து வி.கே.பாண்டியன் விலகல்!


நான் எப்பொழுதும், பிஜூ ஜனதா தளத்தினிருக்கு நன்றியுணர்வோடு இருப்பேன். என் இதயத்தில் எப்பொழுதும் ஒடிசா மக்களுக்கு இடம் இருக்கும், என் மூச்சில் எப்பொழுதும் குருநாதர் நவீன் பாபு இருப்பார். அவர் நலமுடன் இருக்க வேண்டும் என ஜெகன் நாதரிடம் வேண்டிக் கொள்கிறேன் என வி.கே. பாண்டியன் வீடியோவில் தெரிவித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து நேரடி அரசியலுக்குள் வந்த விகே பாண்டியன், அடுத்த 6 மாதங்களில் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். ஒடிசா அரசியலில் புயலைக் கிளப்புவார் இந்தத் தமிழர் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நவீன் பட்நாயக்கின் தோல்வியுடன் விகே பாண்டியனின் அரசியலும் அஸ்தமனம் ஆகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+