நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம்.. விமானத்தில் வந்தவர் வெளியிட்ட திடுக் தகவல்
அமிர்தசரஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்தும் பணிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. நேற்று மதியம் 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அந்த சி 17 ராணுவ விமானத்தில் வந்த ஒருவர், கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததகாவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர். இவர்களை ராணுவ விமானத்தில் அமெரிக்கா எற்றி வந்தது. 104 இந்தியர்களுடன் வந்த அமெரிக்க விமானம் பஞ்சாபின் அமிர்தசரசில் தரையிறங்கியது. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து இருந்தன.

இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டு மத்திய அரசு தரப்பில் மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விமானத்தில் வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். 36 வயதான ஜஸ்பால் சிங் கூறியதாவது:-
கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாக கூறியிருக்கிறார். மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததாகவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்பால் சிங், அமெரிக்கா எல்லையை கடந்த 24 ஆம் தேதி தாண்ட முயற்சிக்கும் போது அந்நாடு எல்லை பாதுகாப்பு ரோந்து படையினரால் பிடிக்கப்பட்டாராம். டிராவல் ஏஜெண்ட் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நேற்று அமெரிக்காவில் இருந்து வந்த விமானத்தில் ஹரியானா மற்றும் குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாபை சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 3 பேர், சண்டிகரை சேர்ந்த இருவர் என மொத்தம் 104 பேர் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த 104 பேரில் 19 பேர் பெண்கள் எனவும் 13 பேர் மைனர்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் விமானம் தரையிறங்கியதும் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வாகனம் மூலமாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவேன் என பிரசாரத்தின் போதே டொனால்டு டிரம்ப் சூளுரைத்தார். அதேபோல, அமெரிக்கா நலன்களுக்கு மட்டுமே முக்கியம் அளிப்பேன் என்றும் பேசியிருந்தார். தொடர்ந்து அதிபராக பொறுப்பேற்றதும், பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி வருகிறார் டொனால்டு டிரம்ப்.

இது ஒருபக்கம் இருக்க, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள புலம் பெயர் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையினையும் அமெரிக்க அதிபர் தொடங்கியுள்ளார். அதன்படி தான் தற்போது 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பேர் உள்ளனர். இரண்டாம் இடத்தில் எல் சால்வடோரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மொத்தம் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிப்பதாகவும், இதில் முதற்கட்டமாக 18 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பட்டியலில் அமெரிக்கா கண்டறிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானமான சி 17 விமானம் மூலம் நாடு கடத்தியது. ஆனால் 104 இந்தியர்கள் தான் நேற்று முன் தினம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வந்தடைந்தனர். டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானம் நேற்று முன் தினம் அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இந்த விமானம் தரையிறங்கியது.












Click it and Unblock the Notifications