மே.வங்க தேர்தல்: புது ரத்தம் பாய்ச்சும் சி.பி.எம்... ஏராளமான இளைஞர்கள் வேட்பாளர்களாக களமிறக்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசரிகள் கூட்டணி ஆகியவை களத்தில் நிற்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தை 34 ஆண்டுகளாக இடதுசாரிகள்தான் ஆட்சி செய்து வந்தனர். மேற்கு வங்கம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலில் இந்த சரித்திரத்தை மாற்றி எழுதினார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி.

இடதுசாரிகள் எதிர்காலம்
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் இருப்பு என்பதே பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. செங்கொடியை கைகளில் ஏந்தி லால் சலாம்! இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்ட சோ கால்ட் இடதுசாரி தோழர்களே காவி கொடி ஏந்தி ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிடும் நிலை உருவாகிவிட்டது.

சிபிஎம் வேட்பாளர் பட்டியல்
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்- காங்கிரஸ் இதுவரை வகித்த இடத்தை பாஜக கபளீகரம் செய்துவிட்டது. இதனால் அந்த மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும் என்கிற நிலையும் விவாதமும் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில்தான் முதல் 2 கட்ட தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களாக இளைஞர்கள்
இந்த வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலும் 40 வயதுக்கு குறைவான இளைஞர்கள்தான் இடம்பெற்றுள்ளனர். 26 வயதாகும் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவரான ஆயிஷி கோஷ், ஜமூரியா தொகுதியில் போட்டியிடுகிறார். ஜே.என்.யூவில் வலதுசாரிகளால் மிக கொடூரமாக தாக்கப்பட்டவர் ஆயிஷா கோஷ்.

நந்திகிராம் தொகுதி
மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கமான எஸ்.எப்.ஐ-ன் மாநில செயலாளர் ஶ்ரீஜன் பட்டாச்சார்யா, சிங்கூர் தொகுதியில் களம் காண்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபியின் மாநில தலைவர் மீனாக்ஷி முகர்ஜி, மமதா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராமில் போட்டியிடுகிறார். நந்திகிராமில் பாஜகவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியுடன் மமதா மல்லுக் கட்டும் நிலையில் மீனாக்ஷி முகர்ஜியை களமிறக்கியிருக்கிறது சி.பி.எம்.

சிபிஎம் முடிவுக்கு வரவேற்பு
நந்திகிராம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மீனாக்ஷி முகர்ஜி, இந்த செங்கொடியை ஒருபோதும் என் கைகளில் இருந்து இறக்க மாட்டேன். என்னால் இந்த தொகுதி மக்களுக்கும் மண்ணின் மக்களுக்கும் ஒருபோதும் அவமானம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளமாட்டேன் என உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டார். மார்க்சிஸ்ட் கட்சி இப்படி இளைஞர்களை வேட்பாளர்களாக களமிறக்கியிருப்பதை அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நல்ல முடிவு என வரவேற்றும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications