மணிப்பூரில் தொடரும் ஷாக்! குக்கி ஆண்களால் கூட்டு பலாத்காரம்! பெண் புகார்! போலீஸ் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு
இம்பால்: மணிப்பூரில் குக்கி, மெய்டெய் சமூக மக்களுக்கிடையேயான மோதல் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த கலவரத்தில் குக்கி சமூக நபர்களால் தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக மெய்டெய் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை தற்போது ஜீரோ எஃப்ஐஆரை பதிவு செய்திருக்கிறது.
மணிப்பூரில் நடந்த கலவரம் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள மெய்டெய் மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, மெய்டெய் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மெய்டெய் மக்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.
இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 4ம் தேதி பேரணி நடத்தினர். அதுபோல மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்தினர். இது இரண்டும் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் தற்போது மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது, கடந்த மே 3ம் தேதி சுராசந்த்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தில் 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜீரோ எஃப்ஐஆர் நேற்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "37 வயது மதிக்கத்தக்க மெய்டெய் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் 3ம் தேதி மாலை 4.30 மணியளவில் சுராசந்த்பூரில் குக்கி சமூக ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் மயங்கிவிட்டதாகவும், கண் முழித்து பார்த்தபோது தான் மெய்டெய் சமூகத்தினரின் கூட்டத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பிஷ்ணுபூர் காவல் நிலையத்தில் அப்பெண் நேற்று புகார் அளித்திருந்தார். அவர்கள் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஜீரோ எஃப்ஐஆர் என்பது சம்பவம் நடந்த இடம் சரியாக தெரியாத பட்சத்தில் உடனடியாக ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆர் ஆகும். பின்னர் இது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதேபோல தடயவியல் துறையும் குற்றம் நடந்த இடத்தில் சோதனை செய்து வருகிறது.
மணிப்பூரில் நடக்கும் கலவரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள சம்பவம் இரு சமூகத்தினரும் பாதிக்கப்பட்டதை உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications