பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால ஆட்சியில் உ.பி ஏராளமான பலன்களை பெற்றிருக்கிறது! யோகி பெருமிதம்
லக்னோ: நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்த இந்த 9 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும், உத்தரப் பிரதேசம் மிகுந்த பலன்களை பெற்றிருக்கிறது எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக தேர்வாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், லக்னோவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் யோகி ஆதித்யநாத் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியால் அதிக அளவில் பலனடைந்துள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று. இந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு நாம் புதிய இந்தியாவை காணலாம்.

இந்த புதிய இந்தியாவுக்கு நான்கு தூண்கள் அடிப்படையானவை. நாட்டின் மரியாதை, உள் மற்றும் வெளி பாதுகாப்பு, ஏழைகளின் நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவைதான் இந்த நான்கு தூண்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவையும் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. நம் நாட்டின் மீதான அக்கறையும், மரியாதையும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் அதிகரித்திருக்கிறது.
அதேபோல நாட்டின் எல்லைகளும் பாதுகாப்பாக இருக்கின்றன. ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அனைத்து பகுதிகளும் பாதுகாப்பாக இருக்கின்றன. தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் நாட்டின் மீது புதிய நம்பிக்கை எழுந்திருக்கிறது. மறுபுறம் இந்தியா தனது 140 கோடி மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை சிறப்பாக மேம்படுத்தியுள்ளது.
சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில், 74 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டன, ஆனால் ஒன்பது ஆண்டுகளில் கூடுதலாக 74 கட்டப்பட்டுள்ளன. இது உட்கட்டமைப்பு எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம். ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி வங்கி கணக்குகள் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்களுக்கான பண பலன்கள் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் சென்று சேர்கிறது. இது அனைத்திற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications