எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர்
ஜெய்ப்பூர்: முகம் தெரியாமல் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க உரிய ஆவணங்களின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஒருநபர் வருவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அந்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்பதால் அதிரடியாக செயல்பட்ட படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்த அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

எல்லை தாண்டிய மர்மநபர்
பிடிபட்ட நபர் தீவிரவாதியா என நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தீவிரவாதி இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருந்தும் அவர் எதற்காக எல்லைக்குள் நுழைந்தார் என்பதை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிடிபட்ட நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து எல்லை தாண்டி சிக்கிய அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட அந்த நபர் பாகிஸ்தானை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞரான முகமது அஹ்மர் என்பது தெரியவந்தது.

ஆன்லைன் மூலம் காதல்
பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆன்லைன் மூலம் மும்பையை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஆன்லைன் மூலமே பல நாட்கள் பேசி வந்த அந்த பெண்ணை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார் முகமது. இதையடுத்து இந்தியா செல்ல முடிவெடுத்து அதனை அந்த பெண்ணிடமும் கூறியுள்ளார். முடிந்தால் இந்தியாவுக்கு வா என அந்த பெண் கூறியதையடுத்து பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பை செல்ல திட்டமிட்டுள்ளார் முகமது. மும்பைக்கு சென்ற பிறகு ஆன்லைன் மூலம் பழகிய அந்த பெண்ணை நேரில் சந்திக்க முகமது அஹ்மார் திட்டமிட்டுள்ளார் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் தீவிர விசாரணை
ஆனாலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த முகமதுவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே பெண்ணைப் பார்க்கத்தான் வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை அறிவதற்காக முகமது தற்போது ஸ்ரீகங்காநகர் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூதரகம் மூலம் நடவடிக்கை
முழுமையான விசாரணைக்கு பிறகு அந்த இளைஞருக்கு குற்றப்பின்னணி இல்லையெனில் மட்டுமே பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலம் அந்த இளைஞர் அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என உள்ளூர் போலீசார் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை பார்ப்பதற்காக வந்த இளைஞர் சிக்கிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
